பிரைவசி முக்கியம்.. வேட்பாளரின் முழு சொத்து விபரத்தையும் வெளியிடத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் முழு சொத்து விபரங்களை வெளியிட தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பைப் பிறப்பித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி கணவன் அல்லது மனைவி ஆகியோரின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் தற்போது நடைமுறையாக உள்ளது.
2019ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் தேசு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பெயர் கரிக்கோ க்ரி. இவர் தனது வேட்புமனுவில் தனது அசையும் சொத்து விபரங்களை மறைத்து விட்டார் எனப் புகார் எழுந்தது. இதனால் இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த குவஹாத்தி ஹைகோர்ட், அவரது தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து க்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் அடங்கி அமர்வு, " தேர்தலில் போட்டியிடுவோரின் ஒவ்வொரு சொத்து விவரம் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு இல்லை. ஒரு வேட்பாளருக்கு தனது வேட்பாளர் அந்தஸ்துக்கு சம்பந்தப்படாத தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது அவரது தனிநபர் உரிமை சார்ந்தது. எனவே, குவஹாத்தி உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து கரிகோ க்ரியின் வெற்றி செல்லும்" என்று தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், குறிப்பிட்ட அந்த வாகனங்களை க்ரி பரிசாக வழங்கி இருப்பதும் விற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே அந்த வாகனங்களை க்ரியின் மனைவி மற்றும் மகனுக்கு சொந்தமானதாகக் கருத முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 123 (2)ன்படி வாகனங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடாதது ஊழலாக கருத முடியாது. வாக்காளருக்கு தொடர்பு இல்லாத அல்லது பொருத்தமற்ற விஷயங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டாம். அவர்களுக்கும் தனியுரிமை (பிரைவசி) உண்டு என கூறப்பட்டுள்ளது.