சென்னை மின்சார ரயில் சேவை மாற்றம்... கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கம்.. பயணிகள் அவதி!
சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமங்களை போக்க அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள்.
பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் 14ம் தேதி வரை சென்னை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், தாம்பரத்திற்கு ரயில்கள் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமப்படுவதை தடுக்க, அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் சிரமத்தை குறைக்கும் விதத்தில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அனைத்து நடவடிக்கைகளையும் போக்குவரத்து துறை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆடிப் பெருக்கு, விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பஸ்களில் கூட்டம் கட்டி ஏறுவதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.