சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
ஏற்காடு: ஏற்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு கேம்ப் ஃபயர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே கோடைகாலம் துவங்கி விட்டாலே மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குளுமையான கோடை வாசத்தலங்களை நோக்கி படை எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தவும், மலைப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், ஏற்காடு மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு அப்பகுதிகளில் கேம்ப் ஃபயர் நடத்த தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கேம்ப் ஃபயர் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டுப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.