அமைச்சர் வீட்டு சுவற்றில் மோதி.. பெரிய ஓட்டையைப் போட்ட டாக்சி!
Aug 24, 2023,02:43 PM IST
டெல்லி: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் டெல்லி வீட்டுச் சுற்றுச் சுவர் மீது டாக்சி ஒன்று பலமாக மோதியதில், சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.
சட்ட அமைச்சராக முன்பு இருந்தவர் கிரண் ரிஜிஜு. தற்போது புவி அறிவியல் துறை அமைச்சராக இருக்கிறார். அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மத்திய டெல்லியின் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் வீடு உள்ளது. இந்த வீட்டின் சுற்றுச் சுவர் மீது நேற்று ஒரு டாக்சி வேகமாக வந்து மோதியது. பலமாக மோதியதால் சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. சுற்றுச்சுவரும் லேசான சேதத்தை சந்தித்தது.
காரை ஓட்டி வந்தவரின் பெயர் ரஹீம் கான். இவர் இதுகுறித்துக் கூறுகையில், நானும் எனது குடும்பத்தினரும் ஹரியானா மாநிலம் நூ நகருக்கு சென்று கொண்டிருந்தோம். அமைச்சர் வீட்டின் அருகே வந்தபோது ஒரு பஸ் எனது காரை பின்னால் இடித்து விட்டது. இதனால் எனது கார் நிலை தடுமாறி வேகமாக வந்து சுவற்றில் மோதி நின்றது என்றார்.