"வச்ச பணம் எங்கே".. நல்லசிவம் - சித்ரா சண்டை.. நடுவில் வந்து தொக்காக மாட்டிய மணிகண்டன்!

Su.tha Arivalagan
Apr 19, 2023,01:18 PM IST
சென்னை: வீட்டில் வைத்த பணம் தொடர்ந்து திருடு போனதால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. ஆனால் கடைசியில்  கணவனும், மனைவியும் சேர்ந்து ஒரிஜினல் திருடனைக் கையும் களவுமாக பிடித்த பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை ராமாபுரத்தில் உள்ள அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் நல்லசிவம். இவர் ஒரு டாக்சி டிரைவர். இவரது மனைவி பெயர் சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அன்னை சத்யா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறது நல்லசிவம் குடும்பம். நல்லசிவம் காலையில் டாக்சி சவாரிக்குப் போய் விடுவார். சித்ராவும் வீட்டு வேலை பார்க்கப் போய் விடுவார். மகனும் பள்ளிக்குப் போய் விடுவார்.



இந்த நிலையில் தினசரி வீட்டில் வைக்கும் பணம் திருடு போய் வந்தது. பெரிய  அளவில் இல்லாமல் சில நூறு ரூபாய்கள் என்ற அளவில் திருடு போய் வந்ததால், நல்லசிவம் எடுத்துச் செலவழித்திருப்பாரோ என்று சித்ராவுக்கும், மனைவி எடுத்திருப்பாரோ என்று நல்லசிவத்திற்கும் சந்தேகம் வந்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று டாக்சிக்காக வாங்கிய கடன் தவணைப் பணம் ரூ. 5000ஐ, தலையணைக்கு அடியில் வைத்து விட்டு குளிக்கப் போயிருந்தார் நல்லசிவம். திரும்பி வந்து பணத்தைப் பார்த்தபோது அதைக் காணவில்லை. இதனால் கோபமான அவர் சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சித்ராவோ தான் எடுக்கவில்லை என்று உறுதிபடக் கூறினார். இதனால் இருவருக்குமே குழப்பமாகி விட்டது. அப்போதுதான், வேறு யாரோ வந்து திருடுகிறார்கள் என்று இருவரும் உணர்ந்துள்ளனர்.

சரி ஒரிஜினல் திருடனை பிடிக்கலாம் என்று முடிவு செய்து சூப்பராக திட்டம் போட்டனர். வழக்கம் போல அன்று சித்ரா வேலைக்குப் போனார். ஆனால் நல்லசிவம் வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார். சித்ராவை கதவை வெளிப்புறமாக பூட்டிச் செல்லுமாறு கூறினார். அவரும் அதுபோலவே போய் விட்டார். சிறிது நேரம் கழித்து பூட்டு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதாவது பூட்டை உடைக்காமலேயே நேக்காக அதைத் திறந்து உள்ளே வந்தான் அந்தத் திருடன்.

உள்ளே பதுங்கியிருந்த நல்லசிவம் அப்படியே அந்தத் திருடன் மீது பாய்ந்து கோழியை அமுக்குவது போல அமுக்கிப் பிடித்துக் கொண்டார். திருடன் திருடன் என்றும் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்து விட்டனர். கடைசியில் திருடன் முகத்தைப் பார்த்து அனைவருமே அதிர்ச்சி ஆனார்கள்.அது வேறு யாரும் இல்லை, நல்லசிவம் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளநீர் வியாபாரி மணிகண்டன்தான்.

தினசரி குடிப்பதற்காக இப்படி நல்லசிவம் வீட்டுக்குள் வந்து பணத்தை எடுத்துச் சென்றவண்ணம் இருந்துள்ளார் மணிகண்டன். பூட்டையும் உடைக்காமல் திறக்க வசதியாக அந்த பேட்லாக்கையே ஸ்குரூவைக் கழற்றி நைஸாக வைத்துள்ளார் மணிகண்டன். அவரை போலீஸாரிடம் பின்னர் ஒப்படைத்தனர். மணிகண்டன் இப்போது சிறையில் கம்மி எண்ணுகிறார்.