EXCLUSIVE: தவெக மாநாட்டிற்கு வந்தது எத்தனை பேர்?...புஸ்ஸி ஆனந்த் சொன்ன சூப்பர் கணக்கு!
சென்னை : விஜய்யின் தவெக கட்சி மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து பல விதமான தகவல்கள் வெளியாயின. ஆனால் மாநாட்டிற்கு இத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என எப்படி கணக்கிட்டார்கள் என்ற சுவாரஸ்ய தகவலை தவெக கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தே தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 10 லட்சம் வரையிலானவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் எத்தனை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. அதே சமயம் எத்தனை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்? அவர்களை துல்லியமாக கணக்கிட்டது எப்படி என புஸ்ஸி ஆனந்தே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் பேசிய உரையாடல் நமக்குப் பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. அதில் புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது:
மாநாட்டிற்கு வந்த வாகனம் ஒவ்வொன்றிற்கும் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. டிரைவரின் லைசன்ஸ், வாகனத்தின் இன்சூரன்ஸ், ஆர்சி புக் ஆகியவை இருந்தால் தான் அந்த லிங்க் ஓபன் ஆகும். டிரைவரின் லைசென்ஸ், வாகனத்தின் இன்சூரன்ஸ், ஆர்சி புக் இவை மூன்றும் இருந்தால் தான் அந்த லிங்க் ஏற்றுக் கொள்ளும். இந்த வகையிலேயே 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் வந்ததாக கணக்கு கிடைத்தது. இது அக்டோபர் 24 ம் தேதிக்கு முந்தைய நாள் வந்தவர்களின் கணக்கு.
இது தவிர டிரைவரின் லைசன்ஸ், வாகனத்தின் இன்சூரன்ஸ், ஆர்சி புக் இவற்றை எல்லாம் நான் எதற்காக உனக்கு தர வேண்டும் என டிராவல்ஸ் நிறுவனங்கள் சில பிரச்சனை செய்து, கடைசி நிமிடத்தில் வந்தவர்கள் என்ற வகையில் ஒன்றரை லட்சம் பேர் வந்துள்ளனர். இதுவே கிட்டதட்ட 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்கூட்டியே வந்து தங்கி இருந்தனர். இது தவிர உள்ளூரிருந்து வந்தவர்கள் அதாவது, திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி போன்ற ஊர்களில் இருந்து கூட்டம் அதிக அளவில் வந்து விடக் கூடாது என்று தான் இரு சக்கர வாகனங்களில் யாரும் வர வேண்டாம் என அறிக்கை விட்டுக் கொண்டே இருந்தோம்.
காரணம், இரு சக்கர வாகனங்களில் வந்தால் கத்துவது, கூச்சலிடுவது போன்றவை எல்லாம் இருக்கும். இது போன்ற விஷயங்களை சார் விரும்ப மாட்டார் என்பதால், அவரிடம் சொல்லி தான் நாங்கள் இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் என கூறிக் கொண்டே இருந்தோம். இருந்தாலும் 60,000 முதல் 70,000 மோட்டர் சைக்கிள்கள் வந்து விட்டன. இவ்வளவு கூட்டம் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.
முதலில் நாங்கள் திட்டமிட்டது மாநாட்டை மாலை 4 மணிக்கு துவங்கி, 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பது தான். முதல் நாள் இரவு 2 மணிக்கு தான் நான் ரூமிற்கு சென்று பாஸ் கொடுக்க துவங்கினேன். கொடுத்துட்டே இருந்தேன். 5.30 மணிக்கு கேட்டால் அனைவரும் வந்துட்டார்கள் என்கிறார்கள்.
நான் நினைச்சது, காலைல 9 மணிக்கு வருவாங்கன்னு நினைச்சேன். இருந்தாலும் என்னோட ஆட்களைப் பற்றி எனக்குத் தெரியும் என்பதால், நான் ஐஜி.,யிடம் ஏற்கனவே சொல்லி விட்டேன், ஒருநாள் முன்னதாகவே அனைவரும் வந்து விடுவார்கள் என்று. எதை வச்சு சொல்றீங்கன்னு கேட்டார் அவர். எனக்குத் தெரியும் என்னோட பசங்களைப் பத்தின்னு நான் சொன்னேன். அது போல் அவர்கள் வந்து விட்டார்கள்.
ஆனால் எந்த குறையும் சொல்ல முடியாதபடி, ராணுவ கட்டுப்பாட்டோடு மாநாடு நடந்தது. கம்பத்தின் மீது ஏறி நின்றவர்களை நான் இறங்கு என்று சொன்னதும் சீட்டுக் கட்டு இறங்குவது போல் சரசரவென இறங்கி விட்டார்கள். தொண்டர்கள் எதைப் பற்றியும் கவலையே படலை. வசதி இருக்கா, இல்லையான்னு கவலையே படலை. தண்ணி இல்லைன்னு கவலைப்படாம, பாத்ரூம் தண்ணியைக் குடிச்சாங்க. எதைப் பத்தியும் அவங்க கவலைப்படலை.
எனக்குத்தான் ரொம்ப பயமா இருந்தது. இவ்வளவு கூட்டம் இருக்கே. பத்திரமாக எல்லோரும் போகணுமேன்னு. எப்படா தளபதி பேச்சு முடியும். எப்படா வெளியேறுவோம்னு இருந்தது. அப்படி ஒரு பயத்துல இருந்தோம். அவ்வளவு கூட்டம். கடவுள் ஆசிர்வாதம் இருந்ததால்தான் தப்பி்சசோம்.
எனக்கு ஒரு மாவட்டத்துல 5000 பேர் பேரைக்கும் தெரியும். கரெக்டா சொல்லிருவேன். காரணம், தளபதி நம்ம கிட்ட நம்பிக் கொடுத்திருக்கார். யார் இருக்கா சார் இல்லைன்னு கரெக்டா தெரியும். அந்த அளவுக்கு நாம டெடிகேட்டடா இருக்கணும். காரணம், நம்ம கிட்ட நம்பிக் கொடுத்திருக்கார் இல்லையா. அதை சரியா செய்யணும் என்று கூறியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்