அண்ணாமலை நிகழ்ச்சியில் "விஜய் மக்கள் இயக்கம்".. அது நாங்க இல்லை.. புஸ்ஸி மறுப்பு

Su.tha Arivalagan
Aug 06, 2023,09:26 AM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தில் விஜய் மக்கள் இயக்கக் கொடியுடன் சிலர் பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது விஜய் மக்கள் இயக்கத்தினர் அல்ல என்று அந்த அமைப்பு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அப்படியானால் விஜய் மக்கள் இயக்கக் கொடியை தவறாக பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியில் யாரேனும் பங்கேற்றனரா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய யாத்திரை தற்போது மதுரையை வந்தடைந்துள்ளது. மதுரையில் அவரது நடை பயணத்தின்போது திடீர் பரபரப்பாக விஜய் மக்கள் இயக்கக் கொடியுடன் சிலர் பங்கேற்றனர். இதனால் விஜய் மக்கள் இயக்கம், பாஜகவுடன் கை கோர்த்து விட்டதா என்ற கேள்வி எழுந்தது.



மதுரை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க கொள்கை பரப்பு செயலாளர் பதிர் சரவணனே கலந்து கொண்டதால் இந்த சந்தேகம் வலுத்தது. ஏற்கனவே விஜய்யை மறைமுகமாக பாஜகதான் இயக்குவதாகவும், திமுகவுக்கு நெருக்கடி தருவதற்காகவே அவரை அரசியலுக்குள் மறைமுகமாக கொண்டு வருவதாகவும் ஒரு கிசுகிசுப்பு உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை நடை பயணத்தில் விஜய் மக்கள் இயக்கக் கொடியுடன் சிலர் கலந்து கொண்டதால் பரபரப்பு கூடியது.

ஆனால் அவர்களுக்கும், விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தற்போது புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும்  அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.