அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு.. நடந்தது என்ன?.. வானதி சீனிவாசன் தந்த விளக்கம் இதுதான்!

Meenakshi
Sep 13, 2024,06:46 PM IST

கோயம்பத்தூர்:   அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு விவகாரம் தொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


அன்னபூர்ணா சீனிவாசன் முதலில் பேசியபோதும், பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஹோட்டலில் சந்தித்து மன்னிப்பு கேட்டபோதும் உடன் இருந்தவர் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். இந்த விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


ஜிஎஸ்டி வரிவிகிதம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் பேசியது குறித்து வைரலானதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் சீனிவாசன். தான் பேசியது  தவறுதான், அதற்காக அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கேட்டார். நானும் சரி வாருங்கள் என்று கூறினேன். அதன்படிதான் அவர் ஹோட்டலுக்கு வந்து அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வருத்தமும், மன்னிப்பும் கேட்டார். தனது குடும்பம் ஆர்எஸ்எஸ் என்றும் அப்போது அவர் கூறினார். இதுதான் நடந்தது. யாரும் அவரை மிரட்டவும் இல்லை, கட்டாயப்படுத்தவும் இல்லை. அவரேதான் மன்னிப்பு கேட்டார்.




இன்றைக்கும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் சம மரியாதைகள் இருக்கிறதா என்று கேட்டால் ஒரு பெண் அரசியல்வாதியாக இல்லை என்று சொல்வேன். ஆனால் அதற்காக  ஐயோ நான் பெண் எனக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. நான் பெண் அரசியல்வாதி என் மேல் இரக்கம் காட்டுங்க; கருணை காட்டுங்கள் என்று சொல்ல மாட்டேன்.


நன்றாக யோசித்துப் பாருங்கள்.. அதே மேடையில் ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்தால் இது மாதிரியான பேச்சுக்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கோயம்புத்தூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர், மிக நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு சகோதரர் மாதிரி. ஜிஎஸ்டி பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவிக்கிறார். காரத்திற்கு தனியா, சுவீட்டுக்கு தனியா ஜிஎஸ்டி இருக்கிறது என பேசுகிறார். ஜிஎஸ்டி பற்றி என்ன குறைகள் இருந்தாலும் பேசுவதற்கு தான் அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் ஒரு கருத்தை சொல்கிறார். 


அவர் பேசுகின்ற பொழுது  இந்த எம்எல்ஏ அம்மா என் கடைக்கு வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. அப்புறம் காபி குடிப்பாங்க சண்டையும் போடுவாங்க. இந்த மாதிரி  பேசினார். நாங்க இம்மீடியட்டா அந்த இடத்தில் ரியாக்ட் பண்ண வில்லை. நான் கேட்டிருக்க முடியும், நான் உங்க கடைக்கு எத்தனை முறை வந்திருக்கிறேன். இல்லை எத்தனை முறை ஜிலேபி சாப்பிட்டிருக்கேன். நான் உங்க கடையில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை, என நான் மேடையிலே சொல்லி இருக்க முடியும். நான் அதை விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒரு பொதுமேடை.


அமைச்சர் நிர்மலா சீதாராமனை, சீனிவாசன் வந்து சந்தித்தபோது, ஜிஎஸ்டி குறித்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் கவலைப்படவில்லை. அதுகுறித்து கருத்து கேட்கத்தானே நான் வந்தேன். அது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்எல்ஏ, அதுவும் ஒரு பெண். அவர் உங்களது கடைக்கு வந்து சாப்பிட்டது குறித்து நீங்கள் பொது மேடையில் பேசலாமா.. அவர் ஜிலேபி சாப்பிட்டார் என்று கூறலாா. ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடையில் வந்து என்னென்னவெல்லாம் சாப்பிட்டார் என்று சொல்லலாமா? அது முறையா? உங்கள் ஹோட்டலுக்கு அடுத்தமுறை 10 பேர் சாப்பிட வந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று அவர்களுக்குத் தோணாதா? என்று தான் கேள்வி எழுப்பினார். 


நாங்கள் மிரட்டி கொண்டு வந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்கிறார்கள். இதில் ஜாதியை வேற இழுக்கிறார்கள். இன்று திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பட்டியலின மக்கள் கடுமையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள். நாட்டிலேயே எஸ்சி மக்களுக்கு அதிக கொடுமை நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்று கூறினார் வானதி சீனிவாசன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்