விஸ்வரூபம் எடுத்த அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு விவகாரம்.. டெல்லி வரை பறந்த பரபரப்பு!
கோவை: தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் விவகாரம் தேசிய பிரச்சினையாக மாறி விட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறி விட்டது.
என்ன நடந்தது?
கோவை கொடிசியா அரங்கில், கடந்த 11ம் தேதி நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில், "உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களோட ரெகுலர் கஸ்டமர். எங்க ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின்னர் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்திற்கு 12 சதவீத ஜிஎஸ்டி என்றால் சண்டை போடுவாங்க.
பண்ணுக்கு ஒரு ஜிஎஸ்டி உள்ளே இருக்கும். க்ரீமுக்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர் நீ பண்ணு குடு நானே கிரீமை வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிற்கும் குறையுங்கள். தயவுசெய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள் ஒரே மாதிரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் புலம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட் தான். ஒரே கிச்சன் தான். ஆனால், வேறு வேறு ஜிஎஸ்டிகள் அதிகாரிகள் புலம்புகிறார்கள்" எனக் கூறியிருந்தார்.
இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்கையில், "ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்சனைகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசி இருக்கிறார். ஒவ்வொரு உணவிற்கும் எவ்வித வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களை பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்
இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானாதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் சீனிவாசன் இருக்கிறார். அப்போது சீனிவாசன் "நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று எழுந்து நின்று கைகூப்பும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் ஆடியோ என்பது சரியாக கேட்கவில்லை. இது பற்றி நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் ஆகியோர் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
ராகுல் காந்தி கண்டனம்
ஆனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கோவையில் உள்ள அன்னபூர்ணா ரெஸ்டாரென்ட் போன்ற ஒரு சிறு வணிகம் செய்து வரும் ஒரு தொழிலதிபர், ஜிஎஸ்டி வரிமுறையை எளிமைப்படுத்துங்கள் என்று ஒரு பொது சேவகரிடம் கேட்கும்போது, கோரிக்கை வைக்கும்போது அதை அடக்குமுறையாக அவமதிப்புக்குள்ளாக்குகிறார்கள்.
அதேசமயம், ஒரு கோடீஸ்வர நண்பர் ஏதாவது விதிமுறையை மாற்றுங்கள் என்றால், சட்டத்தை மாற்றுங்கள் என்று சொன்னால், ஏதாவது பொதுச் சொத்தை விரும்பினால், உடனே மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரித்து அதை செய்கிறது.
நமது சிறு வணிகர்கள் ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கடுமையான முறையில் மாறி விட்ட வங்கி முறைகள், வரி கொள்ளை, மிகவும் அபாயகரமான ஜிஎஸ்டி ஆகியவற்றால் நலிந்து போய் விடடார்கள். இப்போது அவர்களுக்கு அவமரியாதையும் கூடுதலாக வந்து சேர்ந்திருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கும் குறுகிய மனப்பான்மையுடன் கூடிய ஈகோ மனம் கொண்டவர்களுக்கு யாரவது கேள்வி கேட்டால் பதிலுக்கு அவமரியாதையைத்தான் கொடுக்க முடிகிறது.
சிறு குறு தொழில் நிறுவனங்கள் பல வருடங்களாக நிவாரணம் கோரி வருகின்றன. ஆனால் இந்த அராஜக மனம் படைத்த அரசு மக்கள் கோரிக்கையை ஏற்பதே இல்லை. அவர்களைப் புரிந்து கொள்வதே இல்லை. எளிமையான ஜிஎஸ்டியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். இதன் மூலம் பல லட்சம் வணிகர்களைக் காப்பாற்ற முடியும், தொழில்களை காப்பாற்ற முடியும். ஆனால் அரசு இதை செய்வதில்லை என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இந்த விவகாரத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஒரு சாதாரண சிறு வணிகரை, கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ரெஸ்டாரென்ட் அதிபரை நிதியமைச்சரும், பாஜகவும் இணைந்து அவமதித்துள்ள செயல் அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறது. பொது வெளியில் இதுபோல அவமதிக்கும் வகையில் நடப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் நிதியமைச்சர்.
மிகச் சாதாரணமான நியாயமான கேள்வியைத்தான் அன்னபூர்ணா நிறுவன அதிபர் கேட்டார். மோடி அரசு தவறான ஜிஎஸ்டி கொள்கையைக் கையாண்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார். அதைக் கேட்டு அந்த இடத்தில் சிரித்துக் கொண்ட நிதியமைச்சர், தனியாக வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
பாஜக ஆட்சி அமைந்த நாள் முதலே காங்கிரஸ் கட்சி, எளிமையான ஜிஎஸ்டி வரிவிதிப்பை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால் மோடி அரசு இதை கேட்கவே இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தற்போதைய ஜிஎஸ்டி நடைமுறை நீக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான, எளிமையான ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.
கரூர் எம்பி ஜோதிமணி கண்டனம்
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் விடுத்த எக்ஸ் தளப் பதிவு:
கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.
வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.
அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?
தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு.
அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். சீனிவாசன் அவர்களுக்கு எனது அன்பும்,ஆதரவும் என்று கூறியிருந்தார் ஜோதிமணி.
திமுக எம்பி கனிமொழி கருத்து
திமுக எம்பி கனிமொழியும் திருக்குறளை மேற்கோள் காட்டி இந்த விவகாரம் கருத்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’
- குறள் 978, அதிகாரம் 98
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று கனிமொழி கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்