Global investors meet: ஒசூரில் ரூ.7000 கோடி முதலீடு செய்கிறது டாடா நிறுவனம்!

Meenakshi
Jan 06, 2024,06:33 PM IST

ஓசூர்:  ஓசூரில் iphone உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு டாட்டா நிறுவனம் ரூ.7000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ போன் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ஒசூரில் ஐ போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக 7000 கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஓசூரில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது. 




ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அவற்றுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு விட்டன.


நாளை காலை தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.கஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுவார். மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக  கலந்து  கொள்ளவுள்ளார்.