அதிமுக, கம்யூ. தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. பெரும்பாலான ஊர்களில் 80% பஸ்கள் ஓடுகின்றன!

Su.tha Arivalagan
Jan 09, 2024,08:47 AM IST

சென்னை: அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத்  தொடங்கியுள்ளன. இதில் திமுக தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. தற்போது திமுக தொழிற்சங்கத்தினரை வைத்து பஸ்களை இயக்கும் பணி நடந்து வருகிறது.


6 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் தீர்வு ஏற்படவில்லை. ஆறு கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், மற்றவை குறித்து பொங்கலுக்குப் பிறகு பேசலாம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டதை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் நிராகரித்து விட்டன. இதையடுத்து இன்று  முதல் ஸ்டிரைக் தொடங்கியது.




நள்ளிரவு முதல் ஸ்டிரைக்


ஆனால் இந்த ஸ்டிரைக்கில் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச பங்கேற்கவில்லை. அதிமுகவின் அரசியல் சூழ்ச்சி இது. எனவே இந்த ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில் திமுக தொழிற்சங்கத்தினர் முழு அளவில்ப பணிக்கு வந்து பஸ்களை ஓட்டுமாறு அந்த தொழிற்சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்கியது.


இந்த ஸ்டிரைக்கால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக ஆங்காங்கு பாதிப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஊர்களில் 70 முதல் 80 சதவீத பேருந்துகள் ஓடுகின்றன. சில ஊர்களில் மட்டும் 100 சதவீத அளவுக்கு பஸ்கள் இயங்குகின்றன. 


சென்னையில் பரவாயில்லை


சென்னையில் கிட்டத்தட்ட 3000 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன. இதில் காலை 6 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. திருவான்மியூர் உள்ளிட்ட சில டிப்போக்களில் மட்டும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.


திருவாரூர் டிப்போவில் 30 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் 70 சதவீத பேருந்துகள் ஓடுகின்றன. விருத்தாச்சலத்தில் இயல்பான முறையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


காஞ்சிபுரம் பகுதியில் பஸ் ஸ்டிரைக்கால் ஓரளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 40 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பலரும் ரயில்களில் பயணித்து வருகின்றனர். மின்சார ரயில்கள் மூலம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் பயணிக்கிறார்கள்.


மின்சார ரயில்களில் கூட்டம்


சென்னையில் ஓடும் மின்சார ரயில்களிலும் கூட வழக்கத்தை விட சற்று அதிகமான அளவில் கூட்டம் காணப்படுகிறது. மெட்ரோ ரயில்களுக்கும் கூட்டம் அதிக அளவில் வருகிறது.


விரைவுப் பேருந்துகளைப் பொறுத்தவட்டில் 90 தசதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. திருப்பூர், கடலூர் பணிமனைகள் நீங்கலாக, பிற பணிமனைகளில் இயல்பான முறையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.


எங்கும் பாதிப்பில்லை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்


ஸ்டிரைக் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும், எங்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களுக்கும் கூட பிரச்சினையின்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள்  பணிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.