Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.. அதிரடி அறிவிப்பு
டில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் 2025ல் முக்கிய அம்சமாக புதிய வருமான வரித் திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகப் பெரிய வரி சுமையில் இருந்து விடுதலை தரும் வகையில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 8வது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இதில் பல புதிய அறிவிப்புகள், வரி சலுகைகள் ஆகியவற்றை அவர் அறிவித்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், அரசிற்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வரும் மிடில் கிளாஸ் மக்களின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாகவும், அவர்களின் வரிச்சுமையை குறைத்து பெரிய நிவாரணத்தை கொடுக்கும் விதமாகவும் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது புதிய வருமான வரித் திட்டத்தின் கீழ்தான் வரும் என்பது முக்கியமானது. இதன் மூலம் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவோருக்கு இனி வருமான வரி கிடையாது.
திருத்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு
வருட வருமானம் ரூ. 4 லட்சம் - வரி கிடையாது
ரூ. 4 முதல் 8 லட்சம் - 5%
ரூ. 8 முதல் 12 லட்சம்- 10%
ரூ. 12 முதல் 16 லட்சம் - 15%
ரூ. 16 முதல் 20 லட்சம் - 20%
ரூ. 20 முதல் 24 லட்சம் - 25%
ரூ. 24 லட்சத்திற்கு மேல் - 30%
அதே போல் டிடிஎஸ், டிசிஎஸ் பிடித்த விகிதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரியில் மிகப் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாத சம்பளதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு வருமான வரி தாக்கலும் எளிமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் வருமான வரி தாக்கல் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள பிற வரிகள் மற்றும் சலுகைகள்:
6 உயிர் காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி
மிடில் கிளாஸ் மக்களுக்கான தனிநபர் வருமான வரியில் மாற்றம்
ஆண்டு டிடிஎஸ் வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் ஆக உயர்த்தப்படும்
திருத்தப்பட்ட புதிய வருமான வரி தாக்கலுக்கான கால அளவு 4 ஆண்டுகளாக உயர்வு.
மூத்த குடிமக்களுக்கான வரி சலுகை இருமடங்காக உயர்த்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்