ரெடியாகும் பட்ஜெட்.. நாளை "அல்வா கிண்டுதல்".. டெல்லியில் ஏற்பாடு!

Baluchamy
Jan 25, 2023,12:43 PM IST
டெல்லி: 2023 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அல்வா வழங்கும் நிகழ்ச்சி நாளை நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது.



ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தால் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு பின் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சரின் தலைமையில் தனி வல்லுநர்கள் குழு இந்த பட்ஜெட்டை தயாரிப்பார்கள்.     

முதலில் 2022 - 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர்  2023 - 2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சம்பிரதாயமாக ஒரு நிகழ்வு நடைபெறும். அதுதான் அல்வா கிண்டு வழங்கும் நிகழ்ச்சி. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்கள், அந்தப் பணி முடியும் வரை வீடுகளுக்குப் போக மாட்டார்கள். எனவே அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் பட்ஜெட் தயாரிப்பின் இறுதியில் இந்த அல்வா கிண்டி அவர்களுக்கு வழங்குவார்கள். இது பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வாகும்.

இந்த அல்வா நிகழ்ச்சி நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் ப்ளாக்கில் நாளை நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு அல்வாவை வழங்குவார்.