பகுஜன் சமாஜ் கட்சியின்.. ஒருங்கிணைப்பாளராக.. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்‌!

Manjula Devi
Jul 22, 2024,07:00 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 

மனைவி பொற்கொடிக்கு அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய நண்பர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகிறது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சேரந்தவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.