BSNL back with bang: 17 ஆண்டுக்குப் பிறகு ராஜ பாதையில் பிஎஸ்என்எல்.. ரூ. 262 கோடி லாபம்!

Meenakshi
Feb 15, 2025,05:40 PM IST

டெல்லி:   பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கு பின்னர் லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளது. 3வது காலாண்டில், ரூ.262 கோடி லாபம் ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.


அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. இதனால்,  பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது ஆபரேட்டரை BSNLக்கு மாற்றினர். இதனால் BSNL சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க தொடங்கியது.




இது தொடர்பாக பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, BSNL நிறுவனத்திற்கு இது குறிப்பிடத்தக்க திருப்புமுனை. BSNL நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதோடு செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் சேர்த்து செய்ததால் வாடிக்கையாளரின் அதிகரிப்பு BSNLக்கு ஒரு நல்ல மாற்றமாக அமைந்தது. BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக உயர்ந்துள்ளது.  


2024-2025ம் நிதியாண்டின் 3வது காலாண்டில், 2007ம் ஆண்டிற்குப் பிறது முதல் முறையாக காலாண்டு அடிப்படையில் அதிக லாபம் பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் நஷ்டம் 1800 கோடி குறைந்துள்ளது. இதற்கு செலவுகளைக் குறைத்தது முக்கிய காரணமாக உள்ளது. இந்த ஆண்டில் BSNL 4ஜி சேவையை வழங்கியது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக 1,00,000 டவர்கள் வைக்க திட்டமிடப்பட்டது. அதில், 75,000 டவர்கள் நிறுவப்பட்டுவிட்டன. 60,000 செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அனைத்து டவர்களும் செயல்பாட்டு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.