தெலங்கானாவில் நடந்த கோர விபத்து.. 37 வயதான எம்எல்ஏ லஸ்யா நந்திதா பரிதாப மரணம்!

Su.tha Arivalagan
Feb 23, 2024,09:15 AM IST

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், 37 வயதேயான எம்எல்ஏ லஸ்யா நந்திதா பரிதாபமாக மரணமடைந்துள்ளார். அவர் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஆவார்.


முதல் முறை எம்எல்ஏவான அவர் தெலங்கானா அரசியலில் வேகமாக வளர்ந்து வந்தார். மக்களிடையே நல்ல பிரபலமானவர்.  ஹைதராபாத்தில் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் இவரது கார் தாறுமாறாக போய் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த லஸ்யா சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.




ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான, சங்காரெட்டி மாவட்டம் பத்தன்சேரு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் வந்து கொண்டிருந்தது. காலை 6. 30 மணியளவில், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சாலையின் இடது ஓரத்திலிருந்த தடுப்பில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்தது. லஸ்யா மரணமடைந்த நிலையில் கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2016ம் ஆண்டு ஹைதராபாத் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் லஸ்யா. இவரது தந்தை சாயண்ணா, செகந்தரபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏவாகவும் இருந்தவர். அவரது மரணத்திற்குப் பிறகு லஸ்யா எம்எல்ஏ தேர்தலில்  தனது தந்தை தொகுதியிலேயே போட்டியிட்டார். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  புரட்சிக தலைவர் கட்டாரின் மகள் வென்னலாவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றிருந்தார் லஸ்யா என்பது குறிப்பிடத்தக்கது. பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தால் இவர் அமைச்ராகியிருப்பார் என்றெல்லாம்  எதிர்பார்க்கப்பட்டது.


முதல் விபத்தில் தப்பி 2வது விபத்தில் மரணம்




குறுகிய காலத்தில், லஸ்யா விபத்தில் சிக்குவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு பிப்ரவரி 13ம் தேதி மரிகுடா ஜங்ஷன் பகுதியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. பிஆர்எஸ் கட்சியின் பொதுக் கூட்டத்திற்குப் போய் விட்டுத் திரும்பியபோது மரிகுடா பகுதியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. வெள்ளை நிற கார் ஒன்று இவரது கார் மீது பலமாக மோதியது. அந்தக் காரின் டிரைவர் குடிபோதையில் இருந்தது பின்னர் தெரிய வந்தது. அந்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார் லஸ்யா.


இந்த நிலையில் பத்து நாட்களில் இன்னொரு விபத்தை சந்தித்த லஸ்யா, அந்த விபத்தில் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.