சார்லஸ் மன்னரை விட பெரும் பணக்காரர்களான.. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், மனைவி அக்ஷதா மூர்த்தி
லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்லஸை விட, பிரதமர் ரிஷி சுனாக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் பணக்காரர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என்பது, மன்னர் சார்லஸின் தனிப்பட்ட சொத்துக்களை விட அதிகமாக இருப்பதாக சன்டே டைம்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் 1000 பெரும் பணக்காரர்கள் பட்டியலை சன்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோபிசந்த் இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர். நம்ம ஊர் அசோக் லேலன்ட் நிறுவனத்தினர்தான் இவரக்ல். இவர்களது சொத்து மதிப்பு 37.19 பில்லியன் பவுண்டு ஆகும்.
இந்தப் பட்டியலில் பிரதமர் ரிஷி சுனாக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 651 மில்லியன் பவுண்டுகளுடன் 245வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்குப் பின்னால்தான் மன்னர் சார்லஸே வருகிறார். அவரது சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இவருக்கு 258வது இடம் கிடைத்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து அக்ஷதா மூர்த்திக்குக் கிடைத்த பங்குகளைத் தொடர்ந்தே ரிஷி சுனாக் - அக்ஷதாவின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள்தான் அக்ஷதா என்பது நினைவிருக்கலாம். மேலும் இங்கிலாந்து பிரதமர்களாக இருந்தவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையும் ரிஷி சுனாக்கிற்குக் கிடைத்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு மறைந்த ராணி எலிசபெத்தின் சொத்துக்களை விட அதிக சொத்து மதிப்பு உடையவராக இருந்தவர் ரிஷி சுனாக் என்பது நினைவிருக்கலாம். தற்போது மன்னரை முந்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் டாப் 10 பட்டியலில் இந்துஜாவுக்கு அடுத்து, 8வது இடத்தில் இனனொரு இந்தியரான லட்சுமி மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 14.921 பில்லியன் பவுண்டுகள் ஆகும். ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தை மிட்டல் நடத்தி வருகிறார்.