சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை விவகாரம்.. தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு!

Meenakshi
Jun 01, 2024,02:58 PM IST

சென்னை: சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை தமிழ்நாடு முழுவதும் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் மட்டும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னை மாதவரத்தில் முத்தையா என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை நடப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 




இதன்பின்னர் முத்தையாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடை நடத்துவதற்கு அனுமதி பெற்று, தாய்ப்பாலை வாங்கி அதில் மூலப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பால் வராத பெற்றோர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் , தாய்ப்பால் விற்பனை தொடர்பாக மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேறு பொருட்களை விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை 94440-42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.