84 வருடங்களாக ஒரே கம்பெனியில் வேலை.. 102 வயதில் மரணித்து ஓய்வு பெற்ற கின்னஸ் சாதனையாளர்!
பிரேசிலியா : பிரேசில் நாட்டில் ஒரே கம்பெனியில் தொடர்ந்து 84 வருடங்களாக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த முதியவர், தன்னுடைய 102 வது வயதில் இன்று (ஆகஸ்ட் 06) உயிரிழந்துள்ளார். இவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் ஒரே வேலையில் தொடர்ந்து 3 முதல் 6 மாதங்கள் நீடிப்பதே பெரிய விஷயமாகி விட்டது. அதிக சம்பளம், இன்னும் சிறப்பான வேலையை தேடுவோம் என கம்பெனி, கம்பெனியாக மாறுவோரே அதிகம். ஆனால் பிரேசில் நாட்டில் ஒருவர்
ஆண்டு கணக்கில் அல்ல கிட்டத்தட்ட 84 ஆண்டுகள் ஒரே கம்பெனியில் வேலை செய்து, நம்பகமான பணியாளர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
வால்டர் ஒர்த்மேன் என்ற பிரேசில் நாட்டுக்காரர் தான் ஒரே கம்பெனில் 84 வருடங்கள் 9 நாட்கள் வரை பணியாற்றி உள்ளார். இது 2022ம் ஆண்டு ஜனவரி 06 ம் தேதி எடுக்கப்பட்ட கணக்காகும். 1922ம் ஆண்டு பிறந்த வால்டர், தன்னுடைய 15வது, அதாவது 1938ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் ஷிப்பிங் அசிஸ்டென்டாக பணியில் சேர்ந்துள்ளார். ReneauxView என்ற நிறுவனத்தில் தான் அவர் பணியாற்றி உள்ளார். பள்ளி பருவத்திலேயே அபார நினைவாற்றல், கற்றல் திறன் காரணமாக படிப்பில் கெட்டிக்காரராக இருந்துள்ளார்.
ஆனால் வீட்டின் வறுமை நிலை காரணமாக, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உள்ளூரில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மழை, வெயிலிலும் கூட காலில் செருப்பு கூட இல்லாமல் பணி செய்துள்ளார். ஷிப்பிங் அசிஸ்டென்டாக தன்து பணியை துவக்கி இருந்தாலும் அதற்கு மேல் அவரால் கூடுதல் திறமைகள் எதையும் கற்றுக் கொள்ளக் கூட நேரம் இல்லாமல் போனது. இருந்தாலும் நிறுவனம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக பணியாற்றி, விரைவிலேயே பதவி உயர்வு பெற்று, படிப்படியாக உயர்ந்து சேல்ஸ் மேனேஜர் ஆனார்.
தன்னுடைய 84 வருட பணி காலத்தில் கம்பெனியிலும், நாட்டிலும், உலகத்திலும் பலவிதமான மாற்றங்களை இவர் பார்த்துள்ளார். 2019 ம் ஆண்டு தன்னுடைய கின்னஸ் சாதனையை தானே முறியடித்தார். 81 வருடங்கள், 85 நாட்கள் பணி செய்தவர் என்ற சாதனையையும் அடைந்தார். வால்டர் 2022ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி தன்னுடைய 100வது பிறந்த நாளை தன்னுடைய சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். உலகின் மிக முதிர்ந்த பணியாளர் என அடையாளம் காணப்பட்ட வால்டர் இன்று தன்னுடைய 102வது வயதில் உயிரிழந்துள்ளார்.
வால்டரின் மரணம் அவரது நண்பர்களையும், கம்பெனியையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மரணத்திற்கு பிறகு இவரை பற்றி கேள்விப்பட்ட பலரும் இப்படி ஒரு மனிதரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.