"பிரமயுகம்".. வேற லெவல் மம்முட்டி.. கண்டிப்பா படத்தை பாருங்க.. Awesome நடிப்பு.. ஆடிப் போயிருவீங்க!
கொச்சி: நல்ல சினிமாவுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடலாம்.. அப்படிப்பட்ட கதையை உருகி உருகி, இழைத்துப் படமாக்கலாம்.. அப்படிப்பட்ட படங்களுக்காக மெனக்கெடுவோர் மிக மிக குறைவாகி விட்ட காலம் இது. ஆனால் மலையாள திரையுலகம் இதற்கு விதி விலக்கு. நல்ல கதைக்காக "பேயாய்" அலைபவர்கள் அவர்கள். புற உலகின் திரை அழுத்தங்களுக்குப் பணியாமல், சிறந்ததாக உணர்வதை மட்டுமே, கொடுப்பதில் அவர்கள் எப்போதுமே கில்லாடிகள்.. அப்படிப்பட்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது பிரமயுகம்.
72 வயதில், மெகா ஸ்டாராக திகழும் ஒருவர் இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொள்வது நிச்சயம் பிற திரையுலகில் சாத்தியம் இல்லாதது. ஆனால் சமீப காலமாக மம்முட்டி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. சமீபத்தில் வெளியான ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்த காதல் தி கோர் படம் போன்ற ஒரு கதையில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடிப்பார்களா என்பது சந்தேகம்.. இப்போது இன்னொரு நெகட்டிவ் ரோலில், பிரமயுகத்தில் மிரட்டியுள்ளார் மம்முட்டி.
பிரமயுகம்.. கேரளாவின் இருண்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் காட்சிப்படுத்தல். படத்தைப் பார்க்கும்போது அதை பார்வையாளர்களும் ஆழமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு எல்லாமே தத்ரூபமாக உள்ளன. இதுவரை பார்த்திராத மம்முட்டியின் புதிய பரிமாணம், பிரமிக்க வைக்கும் இசை, இயக்கம், காட்சிப்படுத்தல், திரைக்கதை.. எந்த ஒரு இடத்திலும் தடுமாற்றம் இல்லை, தொய்வு இல்லை.. அசத்தலாக வந்திருக்கிறது பிரமயுகம்.
அர்ஜூன் அசோகன், மம்முட்டி, சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் என படத்தில் விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே கலைஞர்கள்.. ஆனால் கதையின் விஸ்தீரணமும், அதை விவரித்த விதமும், கொண்டு சென்ற நடையும்.. பிரமயுகத்தை பிரமிப்பான படைப்பாக மாற்றியிருக்கிறது. கேமரா, இசை, மொழியாளுகை, வசனம், திரைக்கதை.. என எல்லாமே பெஸ்ட்!
டெக்னிக்கலாக படம் அசத்தலாக வந்திருக்கிறது. கூடவே மம்முட்டி உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை பேருமே அருமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். நடிப்பு என்று சொல்லி விட முடியாது.. மாறாக அந்தப் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். அதிலும் மம்முட்டியின் பாடி லாங்குவேஜ்.. அவரது கண்ணில் தெறிக்கும் சிரிப்பு, அதில் பொதிந்துள்ள அந்த குரூரம்.. terrific.. படத்தை பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுப்பதில் குறியாக இருந்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அது மிகச் சரியான விருப்பம் என்பதை படம் பார்க்கும்போது உணர முடியும். அந்தக் கதையின் உணர்வை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அப்படியே அழகாக மனதுக்குள் கடத்திக் கொண்டு போகிறது இந்த பிளாக் அன்ட் ஒயிட் பிரமயுகம். கலரில் எடுத்திருந்தால் இந்த மேஜிக் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் ராகுல் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தை நான் பிளாக் அன்ட் ஒயிட்டில்தான் கற்பனை செய்து வந்தேன். சில ஷாட்டுகளை எடுத்து மம்முட்டி சாரிடமும், தயாரிப்பாளரிடமும் காட்டியபோதும் கூட பிளாக் அன்ட் ஒயிட்டில்தான் எடுத்திருந்தேன். அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. குறிப்பாக மம்முட்டி சார் ரொம்ப ஆர்வமாகி விட்டார். அவரை நெகட்டிவ் ஷேடில் காண்பிக்க நான் கொஞ்சம் கூட தயங்கவில்லை.. காரணம் அவர் ஒரு 100% பெர்பார்மர். நான் நினைத்ததை விட அபாரமாக நடித்துள்ளார் என்றார் ராகுல்.
ராகுலுக்கு இது 2வது படம். அவரது முதல் படம் பூதகாலம். அந்தப் படம் வெகுவாக பேசப்பட்டது. என்ன காமெடி என்றால் அவர் முதலில் முடிவு செய்திருந்த படம் பிரமயுகம்தான். ஆனால் இதில் மம்முட்டியைத் தவிர வேறு யாரையும் அவர் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மேலும், தன்னை நிரூபித்த பின்னர் பிரமயுகத்தை எடுத்தால் சரியாக இருக்கும் என்றும் கருதியுள்ளார். இதனால்தான் முதலில் பூதகாலத்தை எடுத்து விட்டு பின்னர் பிரமயுகத்தை அவர் எடுத்தாராம்.. கொரோனா காலத்தில்தான் பிரமயுகத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளார். எட்டு மாத கால உழைப்பு.. இன்று அந்த உழைப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, ராகுலை நிறைவாக உணரச் செய்துள்ளதாம்.
சரி படத்தின் கதை என்ன..?
ஸாரிங்க, கதையெல்லாம் படிக்கக் கூடாது.. நேராக படத்தைப் பாருங்க.. அப்போதுதான் பிரமயுகத்தைப் பார்த்து நீங்கள் உணர்வுப்பூர்வமாக பிரமிக்க முடியும், அனுபவிக்க முடியும். விரைவில் இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளி வரவுள்ளது. அதேபோல சோனி லைவ் ஓடிடி தளத்திலும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. டிவியில் பார்ப்பதை விட தியேட்டரில் பார்ப்பதே இந்தப் படத்தை அருமையாக அனுபவிக்க சிறந்த வழி.