அயோத்தியில்.. ராமர் கோவிலுக்குப் பக்கத்தில்.. நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்.. விலை ரூ. 14.5 கோடியாம்!

Su.tha Arivalagan
Jan 16, 2024,08:59 AM IST

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள வளாகத்திலேயே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான நிலத்தை நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளாராம். ரூ. 14.5 கோடி மதிப்பிலான இந்த நிலம் வாங்கியுள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டுள்ளார்.


அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அருகே தி சரயு என்ற பெயரில் மிகப் பெரிய நகரியம் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மும்பையைச் சேர்ந்த தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் என்ற புரமோட்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இங்கு அரை கிரவுண்டு முதல் நமக்கு விருப்பமான அளவுக்கு நிலம் வாங்க முடியும். அரை கிரவுண்டு நிலம் தோராயமாக 2 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.




இந்த இடத்தில்தான் நடிகர் அமிதாப் பச்சன் 10,000 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இதன் விலை தோராயமாக ரூ. 14.5 கோடியாகும். ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் தினத்தன்றே இந்த குடியிருப்புப் பகுதியும் திறக்கப்படவுள்ளதாம்.


அயோத்தி ராமர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட கால் மணி நேர பயணத்தில் இந்த இடம் உள்ளது. புதிய அயோத்தி விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் இதை அடையலாம். 2028ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தக் குடியிருப்பு முழுமையாக கட்டி முடிக்கப்படும். இந்த வளாகத்தில் 5 ஸ்டார் ஹோட்டலும் வரவுள்ளது. 7 ஸ்டார் குடியிருப்பு அவென்யூ என்று இதை வர்ணிக்கிறார்கள்.


இந்த இடத்தில் நிலம் வாங்கியிருப்பது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், இந்த இடத்தில் எனது புதிய பயணத்தைத்  தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அயோத்தி எனது மனதில் தனி இடம் பிடித்த ஒரு பகுதியாகும். கலாச்சாரம், ஆன்மீகத்திற்குப் புகழ் பெற்ற அயோத்தியில், இடம் என்பது எல்லைகளைத் தாண்டி ஒரு உணர்ச்சிகரமான உணர்வுகளைக் கொடுக்கிறது என்று கூறியுள்ளார் பச்சன்.


அமிதாப் பச்சனின் பூர்வீகம் உத்தரப் பிரதேச மாநிலம்தான். இங்குள்ள பிரக்யாராஜ் (முன்பு அலகாபாத்) நகரில்தான் இவர் பிறந்தார். இந்த இடம், அயோத்தியிலிருந்து நான்கு மணி நேர தூரத்தில் உள்ளது.