230 சீட்டுக்கு மேல் பாஜகவுக்குக் கிடைக்காது.. ஆட்சியமைக்கவும் முடியாது.. கெஜ்ரிவால் கணிப்பு

Su.tha Arivalagan
May 12, 2024,10:06 AM IST

டெல்லி: பாஜகவால் வருகிற லோக்சபா தேர்தலில் 230 சீட்டுகளுக்கு மேல் பெற முடியாது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவும் வாய்ப்பில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அது உறுதியானது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்.


நான் சிறையிலிருந்து வெளியே வந்து 20 மணி நேரமாகி விட்டது. பலரிடம் பேசியுள்ளேன். தேர்தல் நிபுணர்கள், மக்களிடம் பேசியுள்ளேன். அனைவருமே ஒரே குரலில் சொல்வது, பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்றுதான். 




ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிடி நழுவுகிறது. அங்கு அவர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்காது. அவர்களது சீட்டுகள் இந்த முறை குறையும், அதிகரிக்காது. பாஜகவுக்கு இந்த முறை 220 முதல் 230 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது. இது எனது கணிப்பு மட்டுமல்ல, தேர்தல் நிபுணர்களின் கணிப்பும் இதுதான். மோடி அரசு ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு நீடிக்காது, மீண்டும் பதவி ஏற்காது. 


இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்ததும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அந்தக் கனவு நிறைவேற்றப்படும்.  மேலும் பல அறிவித்த திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் கெஜ்ரிவால்.