வரலாற்றை அழித்து விட்டு புராணத்தை நிறுவ முயல்கிறது பாஜக.. திமுக குற்றச்சாட்டு

Su.tha Arivalagan
Oct 27, 2023,05:59 PM IST

சென்னை: வரலாற்றை அழித்து விட்டு புராணத்தை நிறுவ முயல்கிறது பாஜக. அரசியல் லாபங்களுக்காக மட்டுமே அது ராமரைப் பயன்படுத்துகிறது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்டி வருகின்றனர். இந்தக் கோவில் தொடர்பாக திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவன் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


என்ன சொல்வது..  அவர்கள் வரலாற்றை அழித்து விட்டனர். அதற்குப் பதில் அந்த இடத்தில் புராணத்தை நிறுவுகின்றனர். எந்த நாடாக இருந்தாலும் அதன் வரலாற்றை நினைத்து அது பெருமைப்பட வேண்டும்.  தனது வரலாறு என்ன என்பதை அந்த நாடு அறிந்திருக்க வேண்டும்.




ராமரின் பிறப்பு புராணம். ராமாயாணத்தில் வரும் ஒரு கதை. அது இலக்கியம். இவர்கள் வரலாற்றை காலி செய்து விட்டு புராணத்தைக் கொண்டு வருகிறார்கள். அதைத்தான் பாஜக செய்து கொண்டிருக்கிறது, செய்ய நினைக்கிறது.  இப்படிப்பட்டவர்களை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 


ராமரை அரசியல் கருவியாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ராமர் மீது பக்தியெல்லாம் கிடையாது. ராமரை ஒரு விஷயமாகக் கூட பாஜக கருதுவதில்லை. ஆனால் அரசியல் லாபம் கிடைப்பதால் அதை வைத்து அரசியல் லாபம் அடையவே அது பயன்படுத்துகிறது.. அவ்வளவுதான் என்று  கூறினார் இளங்கோவன்.