ஏன் ராகுல் காந்தி முதல்ல பேசலை.. பாஜக கிடுக்கிப்பிடி கேள்வி

Su.tha Arivalagan
Aug 08, 2023,01:34 PM IST
டெல்லி: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஏன் முதலில் பேசவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது. முதலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லை. மாறாக, கெளரவ் கோகோய் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.



இதுகுறித்து பாஜக தற்போது கிண்டலடித்துள்ளது. கெளரவ் கோகோயை பேச சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தபோது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து, எனக்குத் தெரிந்த தகவல் என்னவென்றால், காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசுவார் என்று லோக்சபா செயலகத்திலிருந்து வந்த தகவல் எனக்குத் தெரிவித்தது. இந்தத் தகவல் எனக்கு 11.55 மணிக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் என்ன நடந்தது.. என்ன பிரச்சினை.. நாங்கள் ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக காத்திருக்கிறோம் என்றார்.

அவரது இந்தப் பேச்சைக் கேட்டதும் பாஜகவினர் சிரித்தபடி மேசைகளைத் தட்டி பிரகலாத் ஜோஷியின் பேச்சை வரவேற்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பதில் முழக்கம் கிளம்பியது. இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்திய பின்னர் கெளரவ் கோகோயை பேச அழைத்தார்.