"எங்க கிட்ட 38 கட்சிகள் இருக்கு.. அசைச்சுக்க முடியாது".. மார் தட்டிக் கொள்ளும் பாஜக!

Su.tha Arivalagan
Jul 18, 2023,01:35 PM IST
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகள் இடம் பெற்றிருப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டணியின் 2வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இன்று முக்கிய ஆலோசனையும், முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன. இந்த நிலையில், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கூடுகிறது.

ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டணியில் இடம் பெறாத அதேசமயம் தோழமை பாராட்டும் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். 



இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,  கடந்த  பல ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வீச்சு அதிகரித்துள்ளது. விரிவடைந்துள்ளது.  மக்களின் அபிலாஷைகளை நாங்கள் பூர்த்தி செய்து வருவதால், கூட்டணியில் இனணையும் கட்சிகளும் அதிகரித்து, கூட்டணியும் விரிவடைந்து வருகிறது. 

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நல்லாட்சியைக்கொடுத்து வருகிறது. இது மேலும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்றார் ஜே.பி.நட்டா.

ஒரு பக்கம் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் மாஸ் காட்டி வரும் நிலையில் அதற்குப் பதிலடியாக பலகட்சிகளை வரவழைத்து டெல்லியில் மெகா மாஸ் காட்ட முயற்சித்து வருகிறது பாஜக. தேசிய ஐனநாயகக் கூட்டணியில் சில புதிய கட்சிகளும்  இணைந்துள்ளன.   எந்தக் கட்சி கிடைத்தாலும் விடாமல் கூட்டணியில் இணைத்து வருகிறது பாஜக.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம்.  ஒரு பக்கம் கட்சிகள் இணைப்பை மேற்கொண்டாலும் மறுபக்கம் கட்சிகள்  உடைப்பையும் பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிராவில் முதலில் சிவசேனா உடைக்கப்பட்டது. சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. அதேபோல அதிமுகவும் உடைந்து 3 துண்டுகளாகப் போய் விட்டது என்பது  நினைவிருக்கலாம்.

அதேபோல வட கிழக்கில் பாஜக வளரவும், ஆட்சியமைக்கவும் உதவிய முக்கியக் கட்சிகள் அனைத்துமே பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கூட்டணிக்கு புதிதாக ஆந்திராவிலிருந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வந்து சேர்ந்துள்ளது.

ஆக மொத்தம் எதிர்க்கட்சிகள் வலுவடைந்து வரும் அதே நேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக தனது அணியையும் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது பாஜக.