சேகர் பாபு அண்ணனுக்கு  வெறும் பழத்தை ஊட்டி விடுங்க.. தலையில் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

Su.tha Arivalagan
Sep 07, 2023,06:45 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர்: அமைச்சர் சேகர்பாபு அண்ணனுக்கு இனிமேல் தோலை உரிச்சுட்டு வெறும் வாழைப்பழத்தை ஊட்டி விடுங்க என்று சேகர்பாபுவின் மனைவிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இதைச் சொல்லி விட்டு தலையிலும் அடித்துக் கொண்டார் அண்ணாமலை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்த அண்ணாமலையிடம் சனாதானம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை.



அண்ணாமலை பேச்சிலிருந்து:

இப்போது நாம் நின்று கொண்டிருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் தமிழ்நாடு அரசின்  சின்னத்தை ஒழிக்க வேண்டும். அதாவது இந்தக் கோவின் கோபுரம்தான் அரசின் சின்னமாகும். கோவில் சிம்பலை எடுத்து விடலாமா. இந்தக் கோவிலை ஒழித்து விடலாமா.. 1950 காலகட்டத்தில் இந்தக் கோவிலின் கோபுரம்தான் அடையாளமாக அறிவிக்கப்பட்டது. எனவே சனாதனத்தை  ஒழிக்க வேண்டும் என்றால் அரசு சின்னத்தை மாற்ற வேண்டும். 

அரசு சின்னத்தை மாற்ற முதல்வர் ஒத்துக்குவாரா, உதயநிதி ஸ்டாலின் ஒத்துக்குவாரா. ஒரு வேளை ஒத்துக்கிட்டாங்கன்னு வைங்க, மாத்தித்தான் பாக்கட்டுமே.  எனவே ஒன்றும் தெரியாமல், புரியாமல், படிப்பறிவில்லாமல், சொல் புத்தி இல்லாமல், கேள்புத்தி இல்லாமல் எதையாவது பேசி விட்டு, பேசியது சரி என்று பேசுவதற்கு நான் என்ன கருத்து சொல்வது. 

சனாதனம் வேரறுப்போம் என்றால் துர்கா அம்மா கோவிலுக்குப் போனால் என்ன சொல்வார்கள்..  வீட்டில் கணபதி ஹோமத்தை எடுக்க வேண்டும். மச்சான் சபரீசன் செய்யும் யாகத்தை எடுக்க வேண்டும். முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். இதே கோவிலில் அப்துல் கலாம் பாசுரம் படித்தார். 30 பாசுரம் படித்தார். ஆண்டாள் முன்பு. அவர் பிறந்த மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருப்பாவையில் உள்ள 30 பாசுரத்தைப் படித்தார். இதெல்லாம் சனாதனம்தான். அதில் வேறுபாடு கிடையாது. 12 ஆழ்வார்களில்  3 பேர்தான் பிராமணர்கள். 63 நாயன்மார்களில் எத்தனை பேர் பிராமணர்கள்.. அவர்களை நாம் கடவுளாக வணங்குகிறோம். 13 பேர்தான் பிராமணர்கள். மற்றவர்கள் சூத்திரர்கள்தானே. 



சனாதனம் என்றில்லை..  கிறிஸ்தவத்தை வேரறுப்பேன், இஸ்லாமை வேரறுப்பேன் என்று உதயநிதி சொல்லியிருந்தாலும் முதல் கண்டனக் குரல் என்னுடைய குரலாகத்தான் இருக்கும்.  எப்படி எல்லாவற்றையும் வேரறுப்பார்கள்.  குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு வரவில்லை என்பதைச் சொல்கிறார்கள். பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த முதல் பெண்மணியாக,  முதல் நாட்டுக் குடிமகளாக அமர வைத்தவர்கள் நாம்தான். அதுதான் சனாதன தர்மம்.. நீங்கதான் ஓட்டுப் போடவில்லையே. நீங்க ஏங்க ஓட்டுப் போடலை. நீங்க ஓட்டுப் போட்டது பிராமணருக்குத்தானே. நான் ஜாதி பேசலைங்க.. ஆனால் என்ன நடந்தது. 

நீங்க எப்படி சனாதனம் பத்திப் பேசலாம். ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதியாக்கும்போது ஓட்டுப் போட்டீங்களா. நாங்கள் வாக்களித்தோம். நாங்கள் சனாதனத்தை நம்பக் கூடியவர்கள் வாக்களித்தோம். அனைத்தும் சமம் என்று நினைத்தோம். வாக்களித்தோம். எங்களிடம் கத்துக்கங்க. சனாதனம் என்றால் என்ன என்று மோடி ஐய்யாவிடமிருந்து கத்துக்கங்க. 



அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் நான் விடுத்த கெடு குறித்துக் கேட்டபோது, இந்து மதம் வாழைப்பழம் போல.  அதன் சனாதனம் என்ற தோலை உரித்து விட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.  நான் சொல்கிறேன், சேகர்பாபு அண்ணன் வீட்டில் அக்கா இருப்பாங்கள்ள அவரது மனைவி.. அவரிடம் சொல்கிறேன்.. இனிமேல் கடையில் வாழைப்பழம் வாங்கும்போது, தோலை உரிச்சுட்டு வாழைப்பழத்தை மட்டும் கொடுங்கன்னு கேட்டு வாங்குங்க.. வீட்டுல வந்த பிறகு அதை வச்சு சேகர்பாபுவுக்கு ஊட்டி விடணும்னு கேட்டுக்கிறேன். அதேபோல சென்னையிலிருந்து எல்லாக் கோவிலுக்கும் வாழைப்பழம் அனுப்பும்போது, தோலை உரிச்சுட்டு வெறும் வாழைப்பழத்தை மட்டும் அனுப்பணும்னு கேட்டுக்கிறேன்.. இது மாதிரி ஆட்களை வச்சுக்கிட்டு என்று கூறியபடி தலையில் அடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார் அண்ணாமலை.