என் மண் என் மக்கள்.. இன்று சென்னையில் 200வது தொகுதியைத் தொடும் அண்ணாமலை யாத்திரை!

Su.tha Arivalagan
Feb 11, 2024,11:09 AM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் நடைப்பயணம் இன்று 200வது சட்டசபைத் தொகுதியைத் தொட்டுள்ளது. சென்னையில் தனது நடைப்பயணத்தை இன்று மேற்கொள்கிறார் அண்ணாமலை. மாலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமும் சென்னையில் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் 234  சட்டசபைத் தொகுதிகளையும் நடைப்பயணம் செல்லும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது 5வது கட்ட யாத்திரை நடந்து வருகிறது.


இன்று சென்னையில் அண்ணாமலை தனது 200வது சட்டசபைத் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் அண்ணாமலை யாத்திரையின்போது பெரும் திரளான மக்கள் திரண்டு வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் குறை கேட்கிறார் அண்ணாமலை, மனுக்களையும் பெறுகிறார்.




தற்போது நிறைவுக் கட்டமாக நேற்று உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லியில் நடைப்பயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. இன்று எழும்பூர், துறைமுகத்தில் அவரது யாத்திரை நடைபெறும். அடுத்து நாளை முதல் 15ம் தேதி வரை சென்னை நகர் மற்றும் புறநகர்களில் உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரை நடைபெறும். தொடர்ந்து 19ம் தேதி தாம்பரம், பல்லாவரம், 20ம் தேதி திருப்போரூர், செங்கல்பட்டில் யாத்திரை நடைபறும்.


21ம் தேதி தனது சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில் நடை பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. 22ம் தேதி சிங்காநல்லூர், 23ம் தேதி மதுரை மேற்கு, சங்கரன்கோவில், 24ம் தேதி வானூர், மயிலம், செய்யூர், மதுராந்தகம் என்று நடைப்பயணம் செய்யும் அண்ணாமலை, 25ம் தேதி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்குத் தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.




திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 25ம் தேதி நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார். இந்தக் கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் நாடாளுமன்றப் பிரசாரத்தின் தொடக்கமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தான் மேற்கொள்ளும் ஊரின் சிறப்புகள், குறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான டிவீட்டுகளையும் அண்ணாமலை தொடர்ந்து போட்டு வருகிறார். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடைப்பயணம் தொடங்கியது. இன்று தனது 200வது சட்டசபைத் தொகுதியை அது தொட்டுள்ளது. மாலையில் துறைமுகம் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அவருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவும் பங்கேற்கிறார். அதன் பின்னர் இருவரும் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.