சத்துணவில் அழுகிய முட்டை.. கவலைப்படாமல் இருக்கிறார் கீதா ஜீவன்.. அண்ணாமலை புகார்
சென்னை: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட பல பள்ளிகளில் சத்துணவில் அழுகிய முட்டை தரப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கிட, பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ₹2,907 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.
ஆனால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அதைக் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது ஊழல் திமுக அரசு. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டது.
உடனடியாக, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.