Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரிசையாக சபதங்களை அடுக்கி உள்ளார். ஹைலைட்டாக நாளை காலை தனக்கு தானே சவுக்கடி கொடுத்துக் கொள்ள போவதாக வேறு தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எப்போதும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் பேசுவார் என்பது தெரியும். அவர் எப்போதும் பேசினாலும் அதிரடியாக ஏதாவது ஒன்றை சொல்லுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அண்ணாமலை பேட்டி கொடுக்கிறார் என்றாலே மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் பரபரக்க துவங்கி விடுகின்றன. ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக சரமாரியாக சபதங்களை போட்டு தாக்கி உள்ளார். அதில் ஒரு விஷயம்தான் ஹைலைட்டே!
இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக திமுக.,வை மிக கடுமையாக தாக்கி பேசினார். அண்ணாமலை கூறியதாவது:
மாணவி வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் எப்படி வெளியே வந்தது? காவல்துறை மூலமாக மட்டும் தான் மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளி வந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தவறு செய்தது போல் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை. பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் காவல் துறையின் உதவி இல்லாமல் எப்படி வெளியே வந்திருக்க முடியும்? அமைச்சராக இருக்க ரகுபதி வெட்கப்பட வேண்டும். காக்கிச் சட்டை போட்டு இப்படி ஒரு எஃப்ஐஆர் எழுதி இருப்பதற்கு வெட்கமாக இல்லையா?
இனி செருப்பு போட மாட்டேன்
தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி திமுக.,வில் இணைந்தவன் தான். குற்றச் செயல்களை மறைக்க அமைச்சர்களுடன் சேர்ந்த ஞானசேகரன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளான். இனி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் எல்லாம் கிடையாது. இதை வேற மாதிரியாக டீல் செய்ய போகிறேன்.
திமுக.,வில் ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி நான் காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று முருகனிடம் முறையிட போகிறேன்.
நாளை காலை 10 மணிக்கு என் வீட்டிற்கு வெளியே நின்று எனக்கு நானே 6 முறை சாட்டையடி கொடுக்க போகிறேன் என தெரிவித்துள்ளார். பிறகு தனது சபதத்தை துவங்கும் வகையில் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே செருப்பை கழற்றி விட்டு, செருப்பு அணியாமல் சென்றார் அண்ணாமலை.
அண்ணாமலை இப்படி அதிரடியாக செருப்பைக் கழற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நிற்கவில்லை. கையில் shame on you stalin என்று அச்சிடப்பட்ட பதாகை ஒன்றையையும் கையில் ஏந்தி ஒரு போட்டோவையும் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அதில், ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை. மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று அவர் கேட்டுள்ளார்.
அமைச்சர் ரகுபதி மறுப்பு
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவ குற்றவாளி ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று சட்ட அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக நீண்ட விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்