ராவணனாக மாறிய ராகுல் காந்தி...புதிய வெடியை பற்ற வைத்த பாஜக

Aadmika
Oct 06, 2023,02:32 PM IST
டில்லி : காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் தேசிய அரசியலில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜவா? எதிர்க்கட்சிகளா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் மூன்றாவது முறையாக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாஜக.,வை வரவே விடக் கூடாது என இந்தியா முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இ-ந்-தி-யா என்ற புதிய கூட்டணியை அமைத்து வியூகம் வகுத்து வருகின்றன.



இதற்கிடையில் உதயநிதி பேசிய சனாதன தர்மம் பற்றிய பேச்சு ஓயாமல் போய் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக - திமுக இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையில் அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. இதனால் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் உள்ளன. பாஜக.,விற்கு அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது பற்றி பல கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் என இந்தியா முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பத்து தலை கொண்ட ராவணன் கெட் அப்பில் மாற்றி போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக. அதோடு, "இவர் தான் நவீன கால ராவணன்.  இவர் தீயசக்தி. தர்மத்திற்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். இவரின் நோக்கமே பாரதத்தை அழிப்பது தான்" என கேப்ஷன் வேறு பதிவிட்டுள்ளது. அதோடு அந்த போஸ்டரில், காங்கிரஸ் கட்சியின் தயாரிப்பு, இயக்கியவர் ஜார்ஜ் சோரஸ் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.  

பாஜக.,வின் இந்த பதிவிற்கு லைக்குகள், ஷேர்கள் குவிந்து வருகிறது. ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருகிறார். கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. பாஜக.,வின் இந்த செலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் பதிலுக்கு அதே போஸ்டரில் ராகுல் காந்தியின் போட்டோவிற்கு பதிலாக பிரதமர் மோடியின் போட்டை வைத்து, ராவணனாக சித்தரித்து போஸ்டர் வெளியிட்டு வருகின்றனர். இது தேசிய அரசியலில் காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.