10 மாவட்டங்களில் பிரமாண்ட பாஜக அலுவலகங்கள்.. மார்ச் 10ம் தேதி தொடங்கி வைக்கிறார் நட்டா

Su.tha Arivalagan
Mar 07, 2023,10:00 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 10 மாவட்ட பாஜக அலுவலகங்களைத் திறந்து வைக்க தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வருகிறார்.

நாடு முழுவதும் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருகிறது. அடி மட்டத் தொண்டர்களிடையே  கட்சியை பலப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் தலைமை அலுவலகங்களை அது திறந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் புதிதாக மாவட்ட தலைமை அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  அதில் பத்து அலுவலகங்கள் திறப்பு விழாவுக்குத் தயாராகி விட்டன. இதையடுத்து  அவற்றைத் திறந்து வைக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மார்ச் 10ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.





கிருஷ்ணகிரியில் மார்ச் 10ம் தேதி நடைபெறும்  விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.  அதே நிகழ்ச்சியில் திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாமக்கல், தர்மபுரி, திருவள்ளூர்  உள்ளிட்ட பிற 9 மாவட்டங்களுக்கான அலுவலகக் கட்டடங்களையம் நட்டா திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்டா வருகை மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பாஜகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. படிப்படியாக பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர். மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் மீதும் பல்வேறு புகார்களை கட்சியினரே வைக்கின்றனர். இந்த நிலையில் நட்டா வருகையின்போது இதுகுறித்தெல்லாம் அவர் அண்ணாமலையுடன் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் மாநில பாஜக உயர் மட்டக் குழுவுடன் அவர் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.