"இந்தியாவைக் கொன்று விட்டீர்கள்".. ராகுல் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு.. அமளி!

Su.tha Arivalagan
Aug 09, 2023,12:54 PM IST
டெல்லி: இந்தியாவைக் கொன்று விட்டீர்கள் என்று ராகுல் காந்தி லோக்சபாவில் பேசியதற்கு சபையில் பாஜக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றே அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்றன.



இரண்டாவது நாளான இன்று ராகுல் காந்தி பேசினார். வழக்கமாகவே அவர் அனல் பறக்கப் பேசுவார். ஆனால் இன்று அவரது பேச்சு சற்று வித்தியாசமாக இருந்தது. பிரமர் மோடியை நேரடியாகவே தாக்கிப் பேசினார். பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதவில்லை.. பாஜகவினர் தேச துரோகிகள்.. இந்தியாவை மணிப்பூரில் கொன்று விட்டனர்.. பாரதமாதாவைக் கொன்று விட்டனர்.. என்று ஆவேசமாக பேசினார்.

முதலிலேயே நான் அதானி குறித்துப் பேச மாட்டேன் என்று கூறி விட்டார் ராகுல். அப்போதே பாஜகவினர் டென்ஷனாகி விட்டனர். தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருந்தனர். ராகுல் காந்தியின் பேச்சின் முக்கால்வாசி நேரதத்தை பாஜகவினரின் முழக்கங்க��ும்,எதிர்ப்புகளும்,கோஷங்களும்தான் ஆக்கிரமித்திருந்தன.

கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தி தனது ஆவேசப் பேச்சை தொடர்ந்தார். விடாமல் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேச்சின்போது குறுகிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ படு ஆவேசமாக ராகுல் காந்தி பேச்சைக் கண்டித்தார். இந்தியாவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டது காங்கிரஸ்தான். வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் புரையோடிப் போக காங்கிரஸ்தான் காரணம். அதுதான் தீவிரவாதத்தை வளர விட்டது.  பல ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாநிலங்களை மீட்டது பாஜகதான். வட கிழக்கில் வன்முறை தலைவிரித்தாட காரணமே காங்கிரஸ்தான். ராகுல் காந்தி தனது பேச்சுக்காக  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடுமையாக சாடிப் பேசினார்.

ஸ்மிருதி இராணி ஆவேசம்



அதேபோல அமைச்சர் ஸ்மிருதி இராணியும் ராகுல் காந்தி பேசியதற்குப் பிறகு எழுந்து ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், நீங்கள் இந்தியா இல்லை, இந்தியாவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உங்களது இந்தியா ஊழல் கறை படிந்தது.  இந்தியாவுக்கு திறமை மீதுதான் நம்பிக்கை உண்டு. வாரிசு அரசியல் மீது நம்பிக்கை கொண்டதல்ல எங்கள் இந்தியா. வெள்ளையர்களைப் பார்த்து அன்று மக்கள் சொன்ன அதே வார்த்தையைத்தான் இப்போதும் சொல்கிறோம்.. க்விட் இந்தியா.. Corruption Quit India, Dynasty Quit India.. இந்தியாவில் இப்போதுதான் திறமைக்கு மரியாதை கிடைத்துள்ளது, இடம் கிடைத்துள்ளது என்றார் ஆவேசமாக.

கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டபோது அவரைத் தோற்கடித்து எம்பி ஆனவர் ஸ்மிருதி இராணி என்பது நினைவிருக்கலாம்.