என்னைப் பார்க்க வர்றீங்களா.. தொகுதி மக்களுக்கு நிபந்தனை விதித்த ..பாஜக எம்பி கங்கனா ரனாவத்

Manjula Devi
Jul 12, 2024,11:51 AM IST

மாண்டி:   தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் கார்ட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் பாஜக எம்பி கங்கனா ரனாவத்.


மாடலிங் துறையில் புகழ்பெற்ற கங்கனா ரனாவத் பாலிவுட்டில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர். நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார். 




இந்த வெற்றியை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஹிந்தியில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்த கங்கனா ரனாவத், மணிக்கர்னிகா என்ற திரைப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார். இதனை அடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தார் கங்கனா. சந்திரமுகி பார்ட்2 படத்திலும் நடித்திருந்தார்.


இப்படியாக தமிழிலும் இந்தியிலும் மாறி மாறி நடித்து குறுகிய காலத்திலேயே பல விருதுகளைப் பெற்ற கங்கனா ரனாவத். அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதன் மூலம் பல்வேறு சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியவர். தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி விடுவதிலும் பஞ்சமில்லாதவர். இந்த சர்ச்சை  கருத்துக்கள் தொடர்பாக இவர் மீது பல புகார்களும் எழுந்தன.


இந்த நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை விட 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகையாக இருந்தவர் தற்போது எம்பி ஆக பதவி வகித்து வருகிறார்.


இந்த நிலையில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். அதில் தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் கார்டை  கொண்டு வர வேண்டும். மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும். எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். இது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.