புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில்.. ஆளுக்கு ஒரு பலாப்பழம்.. கலகலக்க வைத்த பாஜக எம்எல்ஏ!

Manjula Devi
Mar 27, 2025,06:33 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், தனது  தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்.


புதுச்சேரியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த மார்ச் 12ஆம் தேதி அம்மாநிலமுதல்வர் என். ரெங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை வரி இல்லாத பட்ஜெட் என்றும் அறிவித்திருந்தார். இதில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.




குறிப்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.  புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.


500 பள்ளிகளில் பெண் பிள்ளைகள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும் என்ற அறிவிப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரமும் நடைபெற்று வந்தது.  


இந்த நிலையில், புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் ரெங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடினர். அப்போது புதுச்சேரி கலாபட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரின் இறுதி நாளான இன்று கொண்டு வந்தார்.




பிறகு கொண்டுவந்த பலாப்பழங்களை முதலமைச்சர் ரெங்கசாமி, சபாநாயகர்  செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்.  சட்டசபை வளாகத்திற்குள் ஏகப்பட்ட பலாப் பழங்கள் வந்ததால் சட்டசபை முழுவதுமே பலாப்பழ வாசனை தூக்கியது.


இப்போது பலாப்பழ சீசனாகும். குறிப்பாக புதுச்சேரி சுற்றுப் பகுதிகள், தமிழ்நாட்டின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பலாப்பழம் அதிக அளவில்  விளையும் என்பது குறிப்பிடத்தக்கது.