தமிழ்நாட்டில்.. 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக!

Meenakshi
Jun 05, 2024,05:32 PM IST

சென்னை:   தமிழகத்தில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதிலும் 9 தொகுதிகளில் டெபாசிட்டையும் அது பறி கொடுத்துள்ளது. 


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில்  புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக முன்னேற்ற கழகம், அமமுக, தமாகா, பாமக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு (ஓபிஎஸ்) ஆகியோருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 




தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், வட சென்னையில் பால் கனகராஜ், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், நீலகிரியில் எல்.முருகன், கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தஞ்சையில் கருப்பு முருகானந்தம், சிதம்பரத்தில் கார்த்திகாயினி, மதுரையில் ராமசீனிவாசன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களை களம் இறங்கியது பாஜக. 


பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு அதிக அளவு வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். எப்படியாவது சில தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று அண்ணாமலையும், பாஜக தலைமையும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது, அண்ணாமலை அடிக்கடி பாஜக 25 சதவீத வாக்குகளை பெறும் என்றும் 10 முதல் 20 இடங்களை கைப்பற்றுவோம் எனவும் உறுதியாக தெரிவித்திருந்தார். 


ஆனால் தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. எந்தத் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், விருதுநகர், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், நாகை, கரூர், சிதம்பரம், வட சென்னை, பெரம்பலூர் ஆகிய 9 தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. தமிழகத்தில் கால்பதிப்போம் என கூறி வந்த பாஜக  11.4 சதவீதம் வாக்குகள் மட்டும் தான் பெற்றுள்ளது.