மோடியைக் குறி வைக்கும் "இ.ந்.தி.யா".. மொத்தமாக களத்தில் குதித்த பாஜக.. பரபர டெல்லி!

Su.tha Arivalagan
Jul 26, 2023,09:32 AM IST

டெல்லி: பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைத்து திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மொத்தமாக களத்தில் குதித்துள்ளனர்.


நேற்று மாலை முதல் எதிர்க்கட்சிகளின் "இ.ந்.தி.யா" கூட்டணிக்கு எதிராக கடும் விமர்சனங்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். 




மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும், ஏன் மணிப்பூர் பாஜக அரசு இதுவரை கலைக்கப்படாமல் உள்ளது என்பதை அவர் விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணியான "இ.ந்.தி.யா" நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தி வருவதால் அவை நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளன.


இந்த நிலையில் பிரதமர் மோடியை பேச வைக்க எதிர்க்கட்சிகளின் "இ.ந்.தி.யா" கூட்டணி வித்தியாசமான வழிகளை யோசிக்க ஆரம்பித்துள்ளது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர அவை திட்டமிட்டுள்ளன. பாஜக அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் லோக்சபாவில் உள்ள போதிலும் கூட, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அரசுக்குத் தலைமை வகிக்கும் பிரதமர் மோடி அந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளித்த பேச வேண்டும் என்பதால் அதை வைத்து பிரதமரை நிலை குலைய வைக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் திட்டமாகும்.


இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் மொத்தமாக எதிர்க்கட்சிகளின் "இ.ந்.தி.யா" கூட்டணிக்கு எதிராக களம் குதித்துள்ளனர். நேற்று மாலை முதல் அடுத்தடுத்து கடுமையாக விமர்சித்து டிவீட் போட்டு வருகின்றனர்.


உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டுள்ள டிவீட்டில், கடந்த கால வேதனையிலிருந்தும், தோல்வியிலிருந்தும் விடுபடு கூட்டணியின் பெயரை எதிர்க்கட்சிகள் மாற்றியஉள்ளன.  ஆனால் பெயரை "இ.ந்.தி.யா" என்று மட்டும் மாற்றுவதால் அவர்களது கடந்த கால தில்லாலங்கடிகளை மக்கள் மறக்க மாட்டார்கள். அவர்களது நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.  புதிய பெயருடன் வந்துள்ள பழைய சரக்கு இது என்பதை மக்கள் அறிவார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.


இதற்கு ஆம் ஆத்மி தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், நாம் வைத்த குறி இலக்கை சரியாக தாக்கியுள்ளதாக நினைக்கிறேன். காரணம் அங்கு  ஏற்பட்டுள்ள கடும் வலியை உணர்கிறேன் என்று நக்கலாக தெரிவித்துள்ளார்.  இந்த டிவீட்டில் புகுந்து தற்போது பாஜகவினர் கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.


பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க.. எதிர்க்கட்சிகள் பலே திட்டம்!


பாஜக தலைவர் ஜே.பி. நட்டா போட்டுள்ள டிவீட்டில் குட்டிக் கதை ஒன்றை சொல்லியுள்ளார். "ஒரு குழந்தை இருந்தது. எல்லாப் பரீட்சையிலும் அது தோல்வியையே சந்தித்தது. அக்குழந்தையை சக மாணவர்கள், அக்கம்பக்கத்தினர் வெறுத்தனர். இதனால் குழந்தையின் பெயரை மாற்றினால் அதன் மீதான அவப் பெயரும் போகுமே என்று பெற்றோர் நினைத்தனர். அப்படித்தான் இருக்கிறது எதிர்க்கட்சிகள் தங்களது பெயரை "இ.ந்.தி.யா" என்று மாற்றியிருப்பது" என்று கிண்டலடித்துள்ளார்.


மத்திய அமைச்சர்கள் ஜெயசங்கர், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜ்ஜு என பலரும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் எல்லோரும் சொல்லி வைத்தாற் போல "இ.ந்.தி.யா" என்ற பெயரை கடுமையாக விமர்சித்து வருவது, மறைமுகமாக எதிர்க்கட்சிகளின் "இ.ந்.தி.யா" கூட்டணிக்கு நல்ல விளம்பரமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.