"ஈடி, சிபிஐ பிரச்சினையா.. என் கிட்ட வாங்க".. அதிர வைத்த பாஜக தலைவர்!
Sep 12, 2023,01:42 PM IST
கொல்கத்தா: அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டுகள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால், என்னை அணுகுங்க, சரி பண்ணலாம் என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தனது சுயநலனுக்காக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க பயன்படுத்துகிறது. ரெய்டுகள் நடத்தி, எதிர்க்கட்சிகளை சிதறடித்து, பலவீனமாக்கி தன்னை வளர்த்து வருகிறது பாஜக என்பது எதிர்க்கட்சிகள் வைக்கும் பொதுவான புகாராக உள்ளது.
இந்த நிலையில் அனுபம் ஹஸ்ராவின் பேச்சு அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது போல உள்ளது. பாஜக தேசிய செயலாளராக இருப்பவர் அனுபம் ஹஸ்ரா. இவர் பிர்பும் மாவட்டம் போல்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ஊழல் கறை படிந்த திரினமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றிலிருந்து சம்மன் வரும் என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயப்பட வேண்டாம். என்னை அணுகுங்கள். பாஜகவில் சேருவது குறித்து யோசியுங்கள்.
இந்த நிமிடத்திலிருந்து அவர்கள் செய்து வரும் ஊழல் வேலைகளை நிறுத்தி விடுங்கள். என்னை அணுகுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். எனது பேஸ்புக் பக்கத்திற்குப் போங்க, என்னைத் தொடர்பு கொள்ளுங்க. உங்களுக்கு நேரடியாக அணுக, பாஜகவில் சேர தயக்கமாக இருந்தால் சூசகமாக சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களது சேவையை எப்படி கட்சிக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து யோசிக்கலாம் என்று கூறினார் அனுபம் ஹஸ்ரா.