நம்பிக்கை துரோகின்னாலே.. எடப்பாடி பழனிச்சாமிதான்.. எனக்கா அறிவுரை சொல்றீங்க.. அண்ணாமலை பாய்ச்சல்

Su.tha Arivalagan
Jul 05, 2024,10:27 PM IST

விக்கிரவாண்டி:   நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை ஒருவருக்குப் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.


மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. பாஜக கூட்டணி சார்பில் பாமக களத்தில் நிற்கிறது. அதிமுக, தேமுதிக வாக்குகளைக் குறி வைத்து பாமகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுகவினர் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அண்ணாமலையும் கூறி வருகிறார்.




இந்த நிலையில் அண்ணாமலை குறித்து இன்று காலை கோவையில் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக விமர்சித்துப் பேட்டி அளித்திருந்தார். அதற்கு விக்கிரவாண்டியில் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:


நம்பிக்கை துரோகி: நம்பிக்கை துரோகின்னு ஒரு வார்த்தை ஒருவருக்கு பொருந்தும்னா அது எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் பொருந்தும். பிரதமர் இவரை கூட்டிக் கொண்டு போய் பக்கத்தில் உட்கார வைப்பார்.  அவர் இங்கே வந்து தனது சுய லாபத்துக்காக இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல பாஜக வேண்டாம் என்று ஒதுங்கினார்.  நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை பல இடங்களில் டெபாசிட் இழக்க வச்சாங்க மக்கள். நம்பர் 2 கட்சி எத்தனை இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது.


134 வாக்குறுதிகள் என்னாச்சு: தலைவர் சரியில்லை என்பதால் மக்கள் அவரை தண்டித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது 134 வாக்குறுதி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. எப்போ நிறைவேற்றப் போகிறார். கோவையில் நாங்க கொடுத்த வாக்குறுதியை நாங்க நிறைவற்றுவோம்.  அவர் எப்ப நிறைவேற்றுவார். எந்த ஊர்ல போய் பேசுவார். எம்பியே இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார். பழனிச்சாமி சிந்தித்துப் பேச வேண்டும்.


கோவையில் தப்பிப் பிழைச்சீங்க: கோவையில், அதிமுக 13,000 எக்ஸ்ட்ரா ஓட்டு வாங்கி டெபாசிட்டை பறிகொடுக்காமல் தப்பிச்சிருக்காங்க. அப்படி தப்பித்து விட்டு, கோவையில் வீர வசனம் பேசியிருக்கிறார். வெறும் டெபாசிட் வாங்கிய கட்சி பாஜகவை குறை சொல்லிருக்கு. உங்களை விட 2 மடங்கு அதாவது 32 சதவீதத்திற்கு மேல் பாஜக வாங்கியிருக்கு. சிங்காநல்லூர்ல் உங்களுக்கு டெபாசிட் போச்சு, கோவையில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில்  3ல் டெபாசிட் போச்சு. இதுல எனக்கு அவர் அறிவுரை சொல்றாராம். பாஜகவை வளர்ப்பது குறித்து எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். கோவையில் டெபாசிட் போயிருக்கு. தமிழ்நாட்டில் பல இடங்களில் 3வது, 4வது இடம். போய் முதல்ல தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தக் கண்ணாடி அறிவுரை சொல்லும். நீங்க எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்.




எத்தனை தோல்விகள்: எத்தனை தோல்வியைச் சந்தித்திருக்கிறார் அவர்.. 2019ல் தோல்வி,  2021ல் தோல்வி, ஈரோடு கிழக்கு தோல்வி. ஈரோடு சீக்ரெட் எனக்குத் தெரியும் என்று சொல்லியுள்ளார். அந்த சீக்ரெட்டை நான் சொல்கிறேன். ஈரோடு சொந்தக் கோட்டை என்று சொன்னார். ஏன் ஓபிஸ்ஸை வேண்டாம் என்று சொன்னார்.  தொலைபேசியில் என்னிடம் என்ன சொன்னார். அவர் ஏன் தனியாக போட்டியிடுவேன்னு சொன்னார்.  இது எனது சொந்த ஊர், ஒன்றரை லட்சம் ஓட்டில் ஜெயிக்கப் போறேன், ஓபிஎஸ் வேண்டாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு என் கிட்ட தொலைபேசியில் சொல்லலையா.  இதுதான் ஈரோடு ரகசியம்.


ஓபிஎஸ்ஸை அவமதித்தவர் பழனிச்சாமி: இது சொந்த ஊரு, எங்க அம்மாவோட ஊரு, இங்கதான் பிறந்தேன்னு சொன்னார். கம்பீரமாக, ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒன்றாக   அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்ற ஒரே  காரணத்திற்காக ஒதுங்கி நின்றார் அண்ணன் ஓபிஎஸ். அவருக்கு என்ன மரியாதை செஞ்சீங்க.. அவரை எப்படி மதிச்சீங்க.. ஈரோடு கிழக்கில், ஆயிரமாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்று விட்டு இப்படிப் பேசுகிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.