அவர்கள்தான் திருடர்கள்.. நயினார் நகேந்திரனுக்கு எதிராக சதி வலை பின்னிருக்காங்க.. அண்ணாமலை பேச்சு!

Meenakshi
Apr 08, 2024,05:29 PM IST

கோவை: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரனுக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டு இருப்பதாக  பாஜக தமிழக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சதீஷ், நவீன் உள்ளிட்ட 3 பேரை நேற்று முன்தினம் பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இது  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையாக இருந்தால்தான் நான் புகார் அளிக்க முடியும்.  இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது என்று கூறியிருந்தார்.




இந்த நிலையில் இது குறித்து திருப்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறுகையில், சதிவலை பின்னப்பட்டு அதில் நயினார் நாகேந்திரன் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. திமுகவினர் தான் உண்மையான திருடர்கள்.


இம்முறை தங்கச் சுரங்கத்தையே திமுக கொட்டினாலும் கோவையில் பாஜக தான் வெற்றி பெறும். பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார் என்று தெரிவித்துள்ளார்.