தமிழகம் இருண்டு கிடக்கிறது.. முதல்வர் மு.க. ஸ்டாலின் ரீல்ஸ் போடுகிறார்.. பாஜக தலைவர் அண்ணாமலை

Meenakshi
Feb 28, 2025,05:57 PM IST

சென்னை: மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,




மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.


நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே? 


மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என்று தெரிவித்துள்ளார்.