கோவையில் ரோடுஷோ நடத்திய பிரதமர் மோடி.. பூ தூவி பாஜக தொண்டர்கள் உற்சாகம்..!

Meenakshi
Mar 18, 2024,08:10 PM IST

கோவை:  கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாகமாக மோடி கோஷம் முழங்கி, பூக்கள் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.


பிரதமர் நடத்திய இந்த வாகனப் பேரணியில் பிரதமருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தமிழ்நாட்டை மையமாக வைத்து அடிக்கடி வந்து கொண்டிருந்தார் பிரதமர் மோடி. பல்வேறு ஊர்களில் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் பிரதமர் முதல் நிகழ்ச்சியாக இன்று கோவையில் ஒரு ரோடுஷோவை நடத்தினார். 




கர்நாடக மாநிலத்தில் இருந்து இன்று மாலை  கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து  கார் மூலமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் இருந்து பேரணியை தொடங்கினார். பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு  அங்காடி, ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் பிரதமரின் ரோடு ஷோ நிறைவடைந்தது.


சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்த இந்த ரோடுஷோவில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். சாலையின் இருபக்கமும் திரண்டு நின்று பிரதமரை அவர்கள் வரவேற்று வாழ்த்தி கோஷமிட்டனர். 


கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர் நாளை சேலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். மோடி வருகை காரணமாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை,  மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 4,000 மேற்பட்டோர் பாதுகாப்பு  பணியில் பணியாற்ற உள்ளனர்.