சாவர்க்கர், கோட்சே குறித்து பேசியதை எப்படி ஆளுநரால் பொறுத்துக்க முடியும்.. பாஜக கேள்வி!

Su.tha Arivalagan
Feb 12, 2024,06:20 PM IST

சென்னை:  சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு, வீர சாவர்க்கார், கோட்சே குறித்தெல்லாம் பேசினால் அதை எப்படி ஆளுநரால் கேட்டுக் கொண்டிருக்க முடியும் என்று பாஜக கேட்டுள்ளது.


சட்டபையில் இன்று ஆளுநர் தனது உரையை முதலில் வாசிக்காமல் புறக்கணித்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதுகுறித்து பாஜக உறுப்பினர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:




ஆளுநர் உரைக்கு முன்பாக அதாவது தமிழ்த்தாய் பாடி முடித்த பின்னர் நாட்டுப் பண் பாட வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். இதை சபாநாயகரே தெரிவித்தார். ஆனால் கடைசியில்தான் நாட்டுப் பண் பாடப்படும் என்று சபாநாயகர் பதிலளித்துள்ளார். அதன் பின்னர் ஆளுநர் தனது உரையைத் தொடங்கி  2 பத்திகளை வாசித்த பிறகு தனது கருத்தை சொல்லி விட்டு அமர்ந்து விட்டார்.


எல்லாமே முறையாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதன் பின்னர் சபாநாயகர் இறுதியாக பேசும்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கித் தருமாறு சபாநாயகர் பேசினார். அப்போது வீர சாவர்க்கார் குறித்தும், கோட்சே வழிவந்தவர்கள் என்றும் அவர் பேசினார்.  இப்படிப்பட்ட வார்த்தையை சபாநாயகர் பயன்படுத்துவது என்பது இதுவரை மரபில் இல்லாத ஒன்று. இதை சபாநாயகர் அறிமுகப்படுத்தியுள்ளார்.


நாங்களும் இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்க முடியும். ஆனால் முறைப்படி நடக்கிற கூட்டம் என்பதால் நாங்கள் அதைச் செய்யவில்லை.  அவர்கள் மரபுப்படி நடக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். சபாநாயகர் மரபை மீறிப் பேசியதால்தான் ஆளுநர் வெளிநடப்புச் செய்துள்ளார். ஆளுநரால் அதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும் என்றார் நைனார் நாகேந்திரன்.