பலவருட இழுபறிக்கு முடிவு.. மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா.. நாடாளுமன்றத்தில் தாக்கல்

Meenakshi
Sep 19, 2023,05:46 PM IST

புதுடெல்லி: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.


மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மூலம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில்  பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்காக அவை ஒதுக்கீடு செய்யப்படும். கிராம பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.


பல ஆரசுகள் ஆதரவு தந்த போதிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படாமலேயே இத்தனை வருடங்களாக இருந்து வந்தது. ஏன் பல பேராட்டங்களுக்கு பின்னர் தான் 33 சதவீதம் ஒதுக்கீடு என்பதே வந்தது.  அன்றே  கொடுக்கப்பட்டிருந்தால்  இன்று எத்தனை பெண் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்திருப்பார்கள். 




2010ம் ஆண்டு 108 வது சட்டத் திருத்தமாக பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அது மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால் மக்களவையில் நிறைவேறாமல் போனது. இதற்கு காரணம் தான் என்ன?  பல கட்சிகள் இதை எதிர்த்ததுதான்.


இப்படிப்பட்ட பல தடைகளை தாண்டி 2023ம் ஆண்டு இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அது இருக்கும் என்பது உறுதி.


2024 லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் தான் பெண்கள் ஓட்டு வாங்குவதற்காக தான் தற்பொழுது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.  ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கூட வருகிற தேர்தலில் இது அமலுக்கு வராது. மாறாக 2029 தேர்தலில்தான் வர வாய்ப்புள்ளது. எது எப்படியோ இதை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் பெண்ணடிமைத் தனம் மாறும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. 


மத்தியில் பாஜக  ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே நாடு முழுவதும் மதக்கலவரம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருவதாகவே எதிர் கட்சிகள் பாஜாகவை குற்றம் சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்  இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது  எதிர்கட்சிகள் மட்டும் அல்ல ஒட்டு  மொத்த பெண்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.

அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.