பிரதமர் மோடி போட்டியிடப் போவது இங்கேயா?.. இன்று வெளியாகும் பாஜக முதல் லிஸ்ட்.. எகிரும் எதிர்பார்ப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 100 முதல் 120 பேர் கொண்ட வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெறப் போவதாக பரபரப்பாக உள்ளனர் பாஜகவினர்.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பணிகளில் அனைத்துக் அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி குறித்தும்,தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் எந்தத் தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அகில இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட உள்ளதாகவும், இந்த பட்டியலில் 100 முதல் 120 வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிட உள்ள தொகுதிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காசியா - ராமநாதபுரமா?
பிரதமர் போட்டியிடவுள்ள தொகுதி எது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வழக்கம் போல அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதேசமயம், அவர் தெற்கிலும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. அப்படிப் போட்டியிட்டால் அவர் கர்நாடகத்தில் நிற்பாரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் அல்லது கன்னியாகுமரி தொகுதியில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று பாஜகவினரே எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.