ஒடிசாவில் பாஜக ஆட்சி.. தெலுங்குதேசத்துக்கு ஆந்திரா.. கேரளாவில் பாஜகவுக்கு ஒரு சீட்!

Su.tha Arivalagan
Jun 04, 2024,03:14 PM IST

டில்லி :  நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இன்றைய முடிவில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.   ஒடிஷாவில் பாஜக வெல்கிறது.


லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் மத்தியில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதே போல் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல்களில் ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 


ஆந்திர சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜெனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 




ஆந்திராவில் மொத்தமுள்ள 174 தொகுதிகளில் ஜெகன் மோகன் கட்சி தனித்து போட்டியிட்டு வெறும் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது.  பவன் கல்யாண் கட்சி 21 இடங்களிலும், பாஜக., 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 09ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும், இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. 


நவீன் பட்நாயக்கின் சாம்ராஜ்ஜியம் சரிந்தது


அதே போல் ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அங்கு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்து வந்த பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் பதவி இழக்கிறார். ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜூ ஜனதா தளம் இரு கட்சிகளும் 147 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டன. காங்கிரஸ் 145 தொகுதிகளில் போட்டியிட்டது.


ஒடிசாவில் தனிப் பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, ஆந்திராவில் கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்ல இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த கேரளாவில் இது வரை ஒரு எம்.பி., சீட் கூட  பெற முடியாமல் பாஜக போராடி வந்தது. இந்த முறை திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளதால் கேரளாவிலும் பாஜக தடம் பதித்து விட்டது.  இதன் மூலம் வடக்கை தொடர்ந்து தெற்கிலும் பாஜக., தடம் பதிக்க துவங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.