மகள் மாதிரி.. வாக்கு சேகரிக்க வந்தபோது.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்!

Su.tha Arivalagan
Apr 10, 2024,06:33 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரித்தபோது ஒரு பெண்ணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த செயலால் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.


பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் காகென் முர்மு. இவர் வடக்கு மால்டா லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது பிரச்சார ஸ்டைல் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இவர் சன்சல் பகுதியில் உள்ள சிரிஹிபூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க தனது கட்சியினருடன் சென்றார். அப்போது வாக்கு கேட்டபோது, அங்கிருந்த ஒரு பெண்ணை நெருங்கி, அவரது கன்னத்தில் முத்தமிட்டார். வேட்பாளர் முர்முவின் இந்த செயலுக்கு திரினமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் ரீதியாக பாஜக எப்படி நடத்தும் என்பதற்கு இதுவே உதாரணம். வாக்கு கேட்டு வரும்போதே இப்படி செய்கிறார்கள் என்றால் அதிகாரத்திற்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை  நினைத்துப் பாருங்கள். பாஜகவில் இருப்பவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு இவரே உதாரணம் என்று திரினமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.




ஆனால் இதுகுறித்து காகென் முர்மு கூறுகையில், அவர்களை ஏன் பெண்களாகப் பார்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு குழந்தை போல.  குழந்தைக்கு முத்தம் கொடுப்பதில்லையா. அதுபோலத்தான் இதுவும்.  குழந்தைக்கு முத்தம் தருவதைப் போய் விமர்சிக்கிறார்கள் என்றால் அடிமட்ட அளவில் அவர்கள் எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்றுதான் அர்த்தம் என்று சமாளித்துள்ளார்.




இதற்கிடையே, காகென் முர்முவால் முத்தம் கொடுக்கப்பட்ட பெண்ணும், முர்முவின் செயலை நியாயப்படுத்தியுள்ளார். அவர் என்னை மகளைப் போல பார்த்து முத்தம் கொடுத்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. மகளைப் போல நினைத்து ஒருவர் முத்தம் கொடுப்பதை எப்படி தப்பாக பார்க்க முடியும். என்னை காகென் முர்மு மகளைப் போல நினைக்கிறார், அன்பு செலுத்துகிறார். எனக்கு அவர் முத்தம் கொடுத்த போது எனது அப்பா, அம்மாவும் அருகில்தான் இருந்தனர் என்று கூறியுள்ளார்.


பெண்ணுக்கு மட்டுமல்ல, முர்மு தனது பிரச்சாரத்தின்போது ஆண்களுக்கும் கூட முத்தம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்.  மேலும் வயதானவர்களைப் பார்த்தால் டக்கென காலில் விழுந்து வணங்கியும் கூட வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தை தற்போது திரினமூல் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.