லோக்சபா தேர்தல் 2024 : வெற்றி வாய்ப்பு யாருக்கு?.. அடுத்த பிரதமர் யார்?. கருத்துக்கணிப்பு என்ன சொல

Aadmika
Feb 04, 2024,07:13 AM IST

டில்லி : லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம், யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக ஒரு கருத்துகணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் லோக்சபா தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதனால் தேசிய அளவில் அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.


இந்நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் இடிஜி ஆய்வு நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. இதில், 91 சதவீதம் மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் 45 சதவீதம் பேர் பாஜக கூட்டணி 300 க்கும் அதிகமாக இடங்களை பெறும் என்றும், 14 க்கும் அதிகமான சதவீதம் பேர் 400 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


நரேந்திர மோடி - ராகுல் காந்தி




32 சதவீதம் பேர், தேசிய ஜனநாயக கூட்டணி 300 க்கும் குறைவான இடங்களை மட்டும் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் மட்டுமே, பாஜக கூட்டணி தனிப்பபெரும்பான்மையை பெறாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்  அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு கருத்து தெரிவித்த 64 சதவீதம் பேர் 3வது முறையாக நரேந்திர மோடி தான் பிரதமர் ஆவார் என்றும், 17 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் இவர்கள் இருவர் தவிர வேறு யாராவது தான் பிரதமராக வருவார் என்று தெரிவித்துள்ளனர். 


எதிர்க்கட்சி ஒன்றிணைந்து அமைத்த இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. மம்தா பாஜர்னியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். 


சமீபத்தில் நடந்து முடிந்த இந்தி பேசும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. உத்திர பிரதேசம், பீகாரிலும் பாஜக.,வின் பலம் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் இந்த கருத்து கணிப்பு உண்மையாகுமா, இதில் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.