ஹரியானா மாநில கலவரத்துக்கு காரணமான பிட்டு பஜ்ரங்கி அதிரடி கைது

Su.tha Arivalagan
Aug 16, 2023,03:53 PM IST

சண்டிகர்: ஹரியானா மாநிலம் நு பகுதியில் ஏற்பட்ட மிகப் பயங்கரமான கலவரத்துக்கு வித்திட்ட பசுக் கொலை தடுப்புக் குழுவைச் சேர்ந்த பிட்டு பஜ்ரங்கி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


அந்த நபர் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதம் தாங்கிய கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீதாபாத்தைதச் சேர்ந்த பசுக் கொலைத் தடுப்புக் குழுவின் தலைவராக இந்த பிட்டு பஜ்ரங்கி செயல்பட்டு வருகிறார்.


ஜூலை 31ம் தேதி நு நகரில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் ஆகியவை இணைந்து பேரணி நடத்தின. அந்தப் பேரணி பின்னர் வன்முறையாக மாறியது. மிகப் பெரிய கலவரம் வெடித்தது.  இஸ்லாமியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மசூதி தீவைத்து எரிக்கப்பட்டது. அந்தக் கலவரம் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.


இந்தக் கலவரங்களுக்குக் காரணமே பிட்டு பஜ்ரங்கி தான் என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில்தான் அவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவரது இயற்பெயர் ராஜ்குமார் என்பதாகும்.


பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது குழுவின் சமூகவலைதளங்களில் 99 சதவீதம் வெறுப்பு பிரச்சாரம் கொண்டவையாகவே உள்ளன. குறிப்பாக லவ் ஜிஜாத்துக்கு எதிரான பேச்சுக்கள், முழக்கங்கள் அதிகம் உள்ளன. வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களும் நிறைய உள்ளன. 


இந்த பிட்டு பஜ்ரங்கி, மோனு மனீசார் என்பவருக்கு நெருக்கமானவர் ஆவார். மோனு மனீசார் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர். இவரும் நு கலவரத்திற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுபவர். மோனு தற்போது தலைமறைவாக இருக்கிறார். கடந்த ஆண்டு 2 முஸ்லீம் இளைஞர்களைக் கொன்ற வழக்கில் மோனு தேடப்பட்டு வருகிறார்.  இவர் தொடர்ந்து இந்து சமுதாயத்தினரை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசியும், வீடியோ வெளியிட்டும் வருகிறார்.


நு நகரில் நடந்த கலவரத்திற்கு முன்பு பிட்டு பஜ்ரங்கி ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அது பேரணியில் சென்றவர்களைத் தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பேரணியிலும் கூட பிட்டு கலந்து கொண்டு ஆவேசமாக முழக்கமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஹரியானா மாநில அரசுக்கு பிட்டு பஜ்ரங்கியைக் கைது செய்வது தொடர்பாக கடும் நெருக்குதல் ஏற்பட்ட நிலையில்தான் தற்போது வேறு வழியில்லாமல் அவரைக் கைது செய்துள்ளனர்.