Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??
Mar 11, 2025,05:18 PM IST
சென்னை: பிரியாணி என்றாலே எல்லோரும் உயிரை விடுவார்கள். பிரியாணியைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.. ஆனால் அந்தக் காலத்திலேயே ஒரு தீவிரமான பிரியாணி ரசிகரா இருந்திருக்காரு நம்ம டி. எம் சௌந்தராஜன். தலைவர் டெய்லி பிரியாணி சாப்பிடுவாராம்.. அதுதான் தன்னோட குரல் நல்லாருக்கக் காரணம் என்றும் பெருமையாடு சொல்வாராம்.!
பிரியாணியைப் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஒரு காலத்தில் எப்போதாவதுதான் பிரியாணி சாப்பிடுவோம்.. ஆனால் இப்பெல்லாம் அப்படி இல்லை.. எப்பெல்லாம் தோணுதோ அப்பெல்லாம் சாப்பிடலாம்.. அந்த அளவுக்கு பிரியாணி நமக்குப் பக்கத்திலேயேதான் இருக்கிறது. பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிடும் பிரியாணி ரசிகர்களில் முக்கியமானவர் மறைந்த பிரபல பாடகர் டி எம் சௌந்தர்ராஜன்.
டிஎம்எஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் டிஎம் செளந்தரராஜன், தீவிர பிரியாணி ரசிகராம். தினமும் பிரியாணி சாப்பிடுவாராம். 91 வயது வரைக்கும் சென்னையில் உள்ள பிரபல பிலால் ஹோட்டல் பிரியாணி தான் சாப்பிட்டாராம். இதை அவரது மகள் மல்லிகா விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனது அப்பா 91 வயது வரைக்கும் தினமும் பிலால் ஓட்டல் பிரியாணி தான் சாப்பிட்டார். நைட்டானாலும் வீட்டிற்கு பிலால் ஓட்டல் பிரியாணியோடு வந்து எங்களை எழுப்பி ஊட்டி விடுவார். நான் நல்லா இருக்க காரணமே பிரியாணி தான் என்று சொல்லுவார். சுகர் இருந்தாலும் கூட அதை பற்றி கவலைப்படாமல் பிரியாணியை நன்றாக சாப்பிடுவார் என கூறியுள்ளார்.
அப்படி என்னதான் இருக்கு அந்த பிரியாணியில்? இன்னிக்கு செவ்வாய்க்கிழமையா இருந்தாலும் பரவாயில்லை.. படிக்கலாம் வாங்க.
இந்தியாவில் எவ்வளவோ உணவுகள் புகழ்பெற்று இருந்தாலும் கூட பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம். நாவூரும் அளவிற்கு அதன் சுவை மக்களை அடிமையாக்கி உள்ளது. இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. நாட்டில் மற்ற உணவு வகைகளை விட பிரியாணி பிரியர்கள் அதிகம். குறிப்பாக அசைவ பிரியர்கள் பிரியாணியைத்தான் அதிகம் விரும்புகின்றனர். எது சாப்பிட்டாலும் கூடவே பிரியாணியும் இருக்கும்.
எந்த மாநிலத்தில் பிரியாணியின் சுவை நன்றாக இருக்கிறது என பிரியாணி ரசிகர்கள் தேடித் தேடி சாப்பிடவும் ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளமாக பாரம்பரியமாக உள்ள பிரியாணி வகைகள் எல்லா ஊர்களிலும் கிடைக்கும் அளவிற்கு கடைகளும் பெருகிவிட்டன. அதாவது லக்னோ பிரியாணி, காரமான ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி , மலபார் பிரியாணி என நாடு முழுவதும் பல்வேறு வகையான பிரியாணிகள் பிரபலமாகியுள்ளது.
நம்ம தமிழ்நாட்டிலேயே பல வகை பிரியாணி உள்ளது. ஆம்பூர் பிரியாணி, மதுரை நாட்டுக்கோழி பிரியாணி, செட்டி நாடு பிரியாணி வகைகள், தலப்பாக்கட்டி பிரியாணி என்று விதம் விதமான பிரியாணிகள் இங்கும் உள்ளன. திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, சென்னை ராவுத்தர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ஆற்காடு நவாப் பிரியாணி என தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பிரியாணி நிறுவனங்களும் அதிகம் அமைந்துள்ளன. அதேபோல பிரியாணிகளின் வகைகளும் அதிகம் உள்ளது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பிரான் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, முட்டை பிரியாணி என பல வகை பிரியாணிகள் உள்ளன.
இவை தவிர புஹாரி ஹோட்டல் பிரியாணியும், டிஎம்எஸ் விரும்பி சாப்பிட்ட பிலால் பிரியாணியும் சென்னையில் ரொம்ப பிரபலமானவை. இந்த பிரியாணிகள் மக்களின் மனங்களை அதிகம் கவர்ந்து உள்ளன. ஆவி பறக்க பிரியாணியைப் பார்த்தாலே இன்னைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டும் என பிரியாணி பிரியர்களுக்கு எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு இதில் உள்ள மசாலா பொருட்கள் கமகம வாசனையுடன் அதன் சுவை நாவூரும் அளவிற்கு சாப்பிட்டுக்கொண்டே இருப்பது போன்ற உணர்வுகளை தூண்டுகிறது. பெரும்பாலும் கோழிக் கறி, ஆட்டுக்கறி பிரியாணியைத் தான் மக்கள் விரும்பி உண்கின்றனர்.
உதிரி உதிரியான பிரியாணியுடன் சிக்கன் மட்டன் பீசுகளை ரசித்து ருசித்து சாப்பிடும் போது அதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். முன்பெல்லாம் இப்படிப்பட்ட பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் இஸ்லாமியர்களின் கல்யாணம், வீட்டு விசேஷங்களில் தான் சாப்பிட முடியும். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஏனெனில் அசைவ பிரியர்கள் நினைத்த உடனே பிரியாணியை சாப்பிட தெருவுக்குத் தெரு பிரியாணி கடைகள் அதிகரித்துவிட்டன.
எல்லோரும் ரசித்த ஒரு பெரும் பாடகர் டி.எம்.எஸ்.. ஆனால் அவரே ரசித்து ருசித்து கடைசி வரை சந்தோஷித்த உணவு பிரியாணி என்று தெரிய வந்தபோது ஒவ்வொரு பிரியாணி ரசிகர் மனதிலும்.. எங்கள் இனமய்யா நீங்கள் என்ற உச்சகட்ட சந்தோஷம் வந்து போயிருக்கும் என்பதை மறுக்க முடியாது!