"பிர்மிங்காம் நகரம் திவால்".. காஸ்ட் கட்டிங் திட்டங்கள் அமலுக்கு வந்தன!

Su.tha Arivalagan
Sep 07, 2023,12:01 PM IST
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் 2வது பெரிய நகரான பிர்மிங்காம் நகரம் திவாலாகி விட்டதாக அந்த நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் நகர நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

தேவையில்லாத செலவுகளைக் குறைக்க நகர நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பான 114 அறிவிப்பை நகர நிர்வாகக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.  அதில், நிதிப் பற்றாக்குறை இருப்பதாலும், நிதிக் கையிருப்பு கிட்டத்தட்ட வெகுவாக சரிந்து விட்டதாலும், வரும் நாட்களில் செலவுகளில் கட்டுப்பாடு தேவை.கையிருப்பு என்னவோ அதற்குள்ளாகத்தான் செலவுகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம ஊதியம் கோரி ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்திருப்பதால் பிர்மிங்காம் நகர நிர்வாகம் பெரும் ஸ்தம்பிப்பை சந்தித்துள்ளது.  பிர்மிங்காம் நகரில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கிலாந்தின் மிகப் பெரியநகரங்களில் ஒன்றான பிர்மிங்காமில், பன்னாட்டுக் கலாச்சாரம் செழித்தோங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியையும் கூட பிர்மிங்காம் நகரம் நடத்தியது.

கடந்த ஜூன் மாதமே சம ஊதியம் கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகளும், வழக்குகளும் வந்ததால் அரசுடன் பிர்மிங்காம் நகர நிர்வாகம் பேச்சு நடத்தியது. இருப்பினும் அதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில் தற்போது திவால் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது நகர நிர்வாகம்.

நூற்றுக்கணக்கான பெண்கள் தொடர்ந்து வழக்குகள்தான் பிர்மிங்காம் நகர நிர்வாகத்தின் இந்த நிலைக்கு முக்கியக் காரணம். ஆண்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், அவர்கள் கோரிய நிவாரணத்தை வழங்க பிர்மிங்காம் நகர நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதால்தான் அந்த நகரம் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.